கங்கைகொண்ட சோழபுரத்தில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு


கங்கைகொண்ட சோழபுரத்தில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2017 11:16 AM IST (Updated: 11 Nov 2017 11:16 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்ட சோழபுரத்தில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 50). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று கிணறு போன்ற பள்ளம் உருவாகியதை கண்டு பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி அவர் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையை சேர்ந்த கங்கைகொண்டசோழபுரம் காப்பாட்சியர் பிரபாகரன், அகழ்வைப்பக ஆலோசனைக் குழு தலைவர் கோமகன், ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் ஆகி யோர் ஆய்வு செய்தனர்.

மண் உள்வாங்கிய பகுதியில் ஆய்வு செய்தபோது சுடுமண் உறை கிணறு உள்ளது கண்டறியப்பட்டது. சுமார் 15 அடி ஆழம் கொண்ட உறை கிணறானது சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்ட வடிவிலான உறைகளைக் கொண்டு உருவாக்கப்பட் டிருந்தது. இதையொட்டி வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் ஏராளமான மண்பாண்ட ஓடுகளின் உடைந்த பாகங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

அதிக அளவில் சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகளும், தானியங்களை சேமிக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் மற்றும் சீனநாட்டைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக இங்கு சேகரிக்கப்பட்டுள்ள சீன பானை ஓடுகள் மாளிகைமேடு அகழாய்விலும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியின் வடகிழக்கு பகுதியில் உடைந்த ‘எல்’ வடிவ கூரை ஓடுகளின் பாகங்கள் மேற்பரப்பில் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் உடைந்த செங்கற்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இக்கிணறை பயன்படுத்தியிருக்கலாம். இது போன்ற சுடுமண் உறை கிணறுகள் சங்ககாலம் முதல் கி.பி. 16-ம் நூற்றாண்டு வரை மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று காப்பாட்சியர் பிரபாகரன் தெரிவித்தார்.

Next Story