மின் இணைப்பு எண் ஸ்டிக்கர் ஒட்டுவதாக நூதன முறையில் பணம் வசூலித்த 2 பெண்கள் கைது


மின் இணைப்பு எண் ஸ்டிக்கர் ஒட்டுவதாக நூதன முறையில் பணம் வசூலித்த 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 3:30 AM IST (Updated: 12 Nov 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் உள்ள வீடுகளில் மின் இணைப்பு எண் ஸ்டிக்கர் ஒட்டுவதாக கூறி பணம் வசூலித்து நூதன முறையில் மோசடி செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

விருதுநகரில் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்கு 2 பெண்கள் சென்று மின் வாரியத்தில் இருந்து வருவதாகவும், வீட்டு மின் இணைப்பு எண் குறிப்பிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும், அவ்வாறு ஒட்டாதவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது என்றும் கூறி உள்ளனர். இதனை நம்பி வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதித்துள்ளனர். இதற்கு அந்த பெண்கள் இருவரும் ஒவ்வொரு வீட்டிலும் ரூ.30 பணம் வசூலித்துள்ளனர்.

விருதுநகர் பாத்திமாநகர் பகுதியில் இந்த 2 பெண்களும் வசூல் வேட்டை நடத்திக்கொண்டு இருந்த போது அந்த பகுதியில் உள்ள சிலருக்கு அவர்கள் மீது சந்தேகம் வரவே பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த 2 பெண்களையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெயர் மணிமேகலை(வயது 35), கவிதா(30) என்றும் தெரியவந்தது. இவர்கள் மதுரையில் இருந்து ஸ்டிக்கர்களை வாங்கி வந்து இம்மாதிரியான நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்களை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வேறு கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டீஸ்வரி கூறுகையில், வீட்டு மின் இணைப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு மின் வாரியம் யாரையும் நியமிக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் யாரிடமும் இதற்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.


Next Story