பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாரத்தான் போட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு நேற்று காலையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கான போட்டி காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி, பெல் ஓட்டல், ரோச்பூங்கா, துறைமுகசாலை ரெயில்வே கேட் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி காலை 6.45 மணிக்கு தொடங்கி, ரோச் பூங்கா, மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகிற 22–ந் தேதி கோரம்பள்ளத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எம்.பி., மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.