பருவமழையை பயன்படுத்தி சம்பா நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கினர்


பருவமழையை பயன்படுத்தி சம்பா நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கினர்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:00 AM IST (Updated: 12 Nov 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் பகுதியில் பருவமழையை பயன் படுத்தி சம்பா நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், திருமானூர் விவசாயம் நிறைந்த டெல்டா பகுதிகளாக விளங்கி வருகிறது. இதில் தா.பழூர் ஒன்றியம் பொன்னாற்று பாசன வாய்க்கால் மூலம் வரும் நீரில் இருந்து 4,694 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் குறுவை பணிகளை தொடங்குவர். கடந்த பல ஆண்டுகளாக போதிய மழைவரத்து என்பது எட்டா கனியாக இருந்து வருகிறது. இதனால் தா.பழூர் பகுதியில் குறுவை சாகுபடியை அறவே கைவிட்டனர். சம்பா போன்ற ஒரு போக விவசாயமும் பயிரிட்டு அதுவும் பொய்த்து போகக்கூடிய நிலையில் தான் தா.பழூர் விவசாயிகள் உள்ளனர். கடந்தாண்டு போதிய மழை இல்லை. மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்திற்கு தண்ணீர் வராத தாலும், விவசாயிகள் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இதில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுக்கு, அரசு மூலம் நிவாரணமும் வழங்கப்பட்டுள் ளது. இப்படி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் தா.பழூர் வட்டாரத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

மழையால் உற்பத்தி இலக்கு அதிகரிப்பு

தா.பழூர் ஒன்றியத்தை பொறுத்தவரை, சம்பா நெற் பயிர்கள் 5,200 எக்டரில் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழைஇல்லாததால் சுமார் 2,000 எக்டர் மட்டுமே சம்பா நெல் பயிரிடப்பட்டது. ஆனால் இந்தாண்டு மழை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மகிழ்ச்சி அடைந்த தா.பழூர் டெல்டா விவசாயிகள் தங்கள் வசிக்கும் பகுதியான இடங்கண்ணி, அண்ணகாரன்பேட்டை, கோடாலிகருப்பூர், குறிச்சி, சோழமாதேவி, தென்கச்சி பெருமாள்நத்தம், தாதம்பேட்டை, வாழைக்குறிச்சி, மதனத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இதுவரை 3 ஆயிரம் எக்டர் பயிரிட்டுள்ளனர். மேலும் நிர்ணயித்த இலக்குபடி பயிர் உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது விவசாய நிலங்களை உழவோட்டி, நாற்று தயார் செய்து நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கி விட்டனர். மேலும் பல விவசாயிகள் விவசாய நிலங்களை தயார் படுத்தி அடுத்த கட்ட ஆயத்த பணிகளுக்கு தயாராகி விட்டனர். கடந்தாண்டு வறண்டு கிடந்த விவசாய வயல்வெளிகள் எல்லாம் தற்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காட்சி தருகிறது.

விவசாயிகள் ஆர்வம்

அதேபோன்று பருவ மழையை பயன்படுத்தி தோட்டக்கலை பயிரான பருத்தி 900 எக்டரில் பயிரிட்டு உள்ளனர். தற்போது பெய்த மழை யானது பருத்திக்கு நல்ல இதத்தை தந்துள்ளது. மேலும் அதன் செடிகள் நன்கு துளிர்த்து செழித்து வளர ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் அடுத்து வரும் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை 2,500 எக்டரில் பயிரிடுவதற்கும் விவசாயிகள் ஆர்வம் காட்டி தயார் நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததையடுத்து விவசாய பணிகளை ஆர்வத்துடன் தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் இனிவரும் காலங் களில் தேவையான நேரத்தில் போதுமான மழை பெய்தால், நிச்சயம் விவசாயத்தில் நல்ல மகசூலை பெறமுடியும் என தா.பழூர் வட்டார விவசாயிகள் நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.

யூரியா உரங்கள் இருப்பு தேவை

இதுகுறித்து தா.பழூர் வட்டார விவசாயிகள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டை போன்று இல்லாமல், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை பெய்து இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி அளித்துள்ளது. இம்மழையை பயன்படுத்தி தா.பழூர் வட்டாரத்தில் சம்பா நெல் நடவு பணிகளை தொடங்கி விட்டோம். இனி வரும் காலங் களில் பயிர் பாதுகாப்பு வேண்டி, யூரியா உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் மகசூல் பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் யூரியா உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதால் தனியாரிடம் அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் விவசாயத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Related Tags :
Next Story