புகை பிடிப்பதை தட்டிக்கேட்ட பஸ் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்குப்பதிவு
புகை பிடிப்பதை தட்டிக்கேட்ட பஸ் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்தியூர்,
கர்நாடகா மாநிலம் கர்காகண்டியில் இருந்து ஒரு தனியார் பஸ் அந்தியூர் வழியாக பர்கூர் மலைக்கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சின் கண்டக்டராக வடிவேல் (வயது 25), டிரைவராக சதீஷ் (35) இருந்தார்கள். தட்டக்கரை மலைக்கிராமம் அருகே சென்றபோது பஸ்சில் பயணம் செய்த பர்கூரை சேர்ந்த விவசாயியான முத்துசாமி (50) என்பவர் புகைபிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் ஏன் புகை பிடிக்கிறீர்கள்? புகை பிடிக்கக்கூடாது என்று தட்டி கேட்டார்கள். இதனால் அவர்களுக்கும், முத்துசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து முத்துசாமி பர்கூரில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இந்த நிலையில் பஸ் பர்கூரை சென்றடைந்ததும் முத்துசாமியின் உறவினர்கள் 4 பேர் அங்கு வந்தார்கள். பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து வடிவேலையும், சதீசையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இதில் காயம் அடைந்த 2 பேரும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமி உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.