பொதுப்பணித்துறையை இரண்டாக பிரிக்கக்கூடாது பொறியாளர்கள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம்
156 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பொதுப்பணித்துறையை இரண்டாக பிரிக்கக்கூடாது என்று பொறியாளர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு பொறியாளர் சங்க மாநில தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் க.அன்பு சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* பொறியாளர்களின் பதவி உயர்வை பாதிக்கின்ற வகையில் எந்த ஒரு பொறியாளர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது. தற்போது பணி நீட்டிப்பு அல்லது மறு பணியமர்வு ஆணை பெற்று பதவியில் இருக்கின்ற செயற்பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர்களை பதவியில் இருந்து உடனே விடுவிக்கவேண்டும்.
* பொறியாளர்களுக்கு உள்ள நிதிஅதிகார வரம்பை தற்போதைய நிலைக்கு தக்கவாறு உயர்த்தி அரசின் திட்டப்பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றிட தமிழக அரசு ஆணை வழங்கவேண்டும். தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு மத்திய பணி, மாநில பணியில் டாக்டர்கள் மற்றும் கால்நடை டாக்டர்களுக்கு உள்ளது போல் காலவரைமுறையுடன் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும்.
* முதுநிலை பட்டம் பெற்ற பொறியாளர்கள் தாங்கள் படித்த தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி துறையின் மேம்பாட்டுக்கும், செயல்பாட்டுக்கும் மேலும் சிறப்பு சேர்ப்பதால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 ஊக்க ஊதியம் நியாயமானது. எனவே, அவ்விரு ஊக்க ஊதிய உயர்வுகளை மீண்டும் முதுநிலை பட்டம் பெற்ற பொறியாளர்களுக்கு வழங்கவேண்டும்.
* 156 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பொதுப்பணித்துறையை இரண்டாக பிரிக்கக்கூடாது. தற்போது இயங்கி வருவது போல் கட்டிட அமைப்பு மற்றும் நீர்வள ஆதார அமைப்பு என ஒரே துறையாக பொதுப்பணித்துறையின் கீழ் தொடர்ந்திட வேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த கட்டிட பணிகளை, பொதுப்பணித்துறையே செயலாக்கம் செய்திடவேண்டும்.
* பொதுப்பணித்துறையில் பிரிவு நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பட்டம் படித்த பொறியாளர்களை மட்டுமே பணி அமர்த்தி துறை திட்டங்களை நவீன உக்தியுடன் நிறைவேற்றிட வேண்டும். பொதுப்பணித்துறையில் திட்ட பணிகள் விரைந்து நடத்திட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆவன செய்யவேண்டும்.
* பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்திட தலைமை பொறியாளர் (திட்டம்), தலைமை பொறியாளர் (சிறுபாசனம்) மற்றும் பொதுப்பணித்துறை கட்டிட பிரிவில் தலைமை பொறியாளர் (சிறப்பு கட்டிடம்) ஆகிய பதவிகளை உருவாக்க வேண்டும்.
2007–ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக உதவி பொறியாளர்களாக பணியமர்ந்தவர்கள் உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வுபெற தகுதி பெற்றிருந்தபோதும் 2014–ம் ஆண்டு முதல் உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 2007–ம் ஆண்டு பணியமர்ந்த நேரடி உதவி பொறியாளர்களுக்குரிய பதவி உயர்வினை விரைந்து பெற்றுத்தரவேண்டும்.
* பொதுப்பணித்துறையினையும், பொறியாளர்களின் பணி நலன்களையும் மேம்படுத்த பொறியியல் சீர்திருந்தக்குழு அமைக்க வேண்டும். பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் இருக்கும் அண்ணா விருதை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொறியாளர் சங்க ஈரோடு கிளை தலைவர் எஸ்.நடராஜன், செயலாளர் ரா.இளஞ்செழியன், உதவி பொறியாளர் சங்க மாநில தலைவர் ரா.ஜெயகுமார், பொதுச்செயலாளர் மு.தனசேகரன், ஈரோடு கிளை தலைவர் எம்.சுபாஷினி, செயலாளர் ஆர்.குமார் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 21 கிளை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.