கோவில் திருப்பணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 14 ஐம்பொன் சிலைகள் மீட்பு


கோவில் திருப்பணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 14 ஐம்பொன் சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 4:45 AM IST (Updated: 12 Nov 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே கோவில் திருப்பணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 14 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலப்பழஞ்சூர் கிராமத்தில் சிதலமடைந்த நிலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழமலைநாதர் கோவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் அன்னிய படையெடுப்பின் போது இந்த கோவில் தகர்க்கப்பட்டது.

அப்போது படையெடுப்புக்கு முன் பழஞ்சூர் பகுதி மக்கள் பூமியில் பெரிய பள்ளம் தோண்டி பழமலைநாதர் கோவில் சிலைகளை பூமிக்கு அடியில் புதைத்து வைத்து விட்டு தலைமறைவானார்கள். இதைத்தொடர்ந்து கோவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து அரிய கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தநிலையில் பழமலைநாதர் கோவிலை புதிதாக கட்ட 15 ஆண்டுகளுக்கு முன் பூமிபூஜை நடைபெற்றது. இதன்பின் பல காரணங்களால் கோவில் கட்டும் பணி தடைபட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை கோவில் திருப்பணிக்காக அழ்துளை கிணறு அமைக்க பூமியில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது பூமியில் இருந்து வினோத சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மேலும் பூமியை தோண்டினர். அப்போது பூமிக்குள் பல சாமி சிலைகள் புதைந்து இருப்பது தெரியவந்தது. இதில் சாமி சிலைகள் மட்டுமின்றி பீடம், பூஜை பாத்திரங்கள் உள்பட 25 பொருட்கள் இருந்தன. இதில் 14 ஐம்பொன் சாமி சிலைகள் அடங்கும். 3 முதல் 5 அடி உயரம் வரை உள்ள நடராஜர், முருகன், விநாயகர், நர்த்தனகிருஷ்ணர், அம்மன், நாயன்மார்கள் சிலைகள் இருந்தன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இந்த சிலைகள் மற்றும் பொருட்களை பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் ரகுராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சிலைகள் மற்றும் பொருட்கள் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பூமியில் புதைந்திருந்த சிலைகள் வெளியே எடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் ஏராமான மக்கள் சம்பவ இடத்தில் கூடி சிலைகளை பார்த்து சென்றனர். 

Related Tags :
Next Story