காவிரி ஆற்றுப்பகுதியில் பரிகார பூஜைகள் செய்வதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்


காவிரி ஆற்றுப்பகுதியில் பரிகார பூஜைகள் செய்வதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுப்பகுதியில் பரிகார பூஜைகள் செய்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் புகழ்பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் எதிர்புறம் புகழ்மிக்க கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரை உள்ளது. இந்த கடம்பந்துறை காவிரி ஆற்றில் இருந்து தினந்தோறும் புனிதநீர் எடுத்துவரப்பட்டு கடம்பவனேசுவரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதேபோல் குளித்தலை மற்றும் குளித்தலையை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடைபெறும்போது இந்த கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் இருந்துதான் புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப் படுகிறது.

பரிகாரம்

தைப்பூச தினத்தன்று கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் 8 ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து சிவபெருமான் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் வந்து இந்த கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோல் தீர்த்தவாரி நடைபெறுவது இல்லை என்றே கூறலாம்.

இதுபோன்ற பல்வேறு சிறப்புமிக்க இந்த கடம்பந்துறை காவிரி ஆற்றுப்பகுதி நாளுக்கு நாள் அசுத்த மடைந்து வருகிறது. சிலர் தோஷம் மற்றும் பரிகாரம் செய்வதாகக்கூறி ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியினரை இங்கு அழைத்து வருகின்றனர். இவர்கள் ஆற்றில் உள்ள மணல் வெளியில் அமர்ந்து சிறிய வாழைக் கன்றுகளை நட்டுவைத்து அதை வெட்ட செய்கின்றனர். பலி கொடுப்பதாகக்கூறி கோழி, ஆட்டுக்குட்டி ஆகியவற்றை வெட்டி அதன் தலைகளை ஆற்றின் மணல் வெளியிலோ அல்லது ஆற்று நீரிலோ வீசிவிடுகின்றனர். அவ்வாறு வீசப்படுவதால் அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றுக்கு குளிக்க வருபவர்கள் இந்த துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு குளிக்க வேண்டியுள்ளது.

சிரமத்திற்கு உள்ளாகின்றனர்

மேலும் இவர்கள் சாங்கியம் என்ற பெயரில் ஆற்றங்கரையில் குழிகள் பறித்து அதில் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களைபோடுகின்றனர். பரிகாரம் செய்யவந்தவர்கள் ஆற்றில் குளித்துவிட்டு தாங்கள் அணிந்துள்ள ஆடைகளை ஆற்றிலேயே விட்டு விடுகின்றனர். இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்பவர்களும் மண்பானைகளில் இறந்தவர்களின் எலும்புகளை வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். காவிரி ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருபவர் களும் வாழை இலை உள்ளிட்ட பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு செல்கின்றனர். குளிப்பதற்காக ஆற்றில் இறங்கும்போது ஆற்றுநீரில் துணிகள், பானை மற்றும் எலும்புகள், இலைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடப்பதால், ஆற்றில் குளிக்க வருபவர்களும், திருவிழாவிற்கு புனிதநீர் எடுக்க வருபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

வேண்டுகோள்

எனவே காவிரி ஆற்றின் புனிதத்தை காக்கவும், குளிக்க வருபவர்கள் நலனை கருத்தில் கொண்டும் அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிகாரம் செய்யவருபவர்களுக்கும், திதி கொடுக்க வருபவர்களுக்கும் காவிரி கரையோரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கவேண்டும். ஆற்றின் ஓரத்தில் பெரிய குழியை பறித்து அதில் உள்ள நீரில் பரிகாரம், திதி கொடுத்தபின்பு அவர்கள் ஆற்றில் போடவிரும்பும் பொருட்களை இந்த குழியில் போடுமாறு அறிவிப்பு பலகை வைக்கவேண்டும். இதுபோல் ஈமக்கிரியைசெய்பவர்கள் பானைகள் மற்றும் இறந்தவர்களின் எலும்புகளை இந்த குழியில் போடுமாறு அறிவுறுத்தவேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை இந்த குழியில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story