தென்கரை கண்மாய் ஆக்கிரமிப்பு; நீர் தேக்க முடியாததால் ஒரு போக விவசாயம் பாதிப்பு


தென்கரை கண்மாய் ஆக்கிரமிப்பு; நீர் தேக்க முடியாததால் ஒரு போக விவசாயம் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

தென்கரை கண்மாய் நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், ஒரு போக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சோழவந்தான்,

மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் சோழவந்தானை அடுத்த தென்கரை கண்மாயும் ஒன்றாகும். இங்கு பெரியாறு பாசன கால்வாய் மூலம் நீர்வரத்து பெற்று விவசாயம் பணிகள் நடைபெறும். கண்மாயின் பரப்பளவு சுமார் 646 ஏக்கர் ஆகும். 20 அடி நீர்மட்டம் கொண்ட கண்மாயில் நீர் தேக்கப்பட்டு தென்கரை, முள்ளிப்பள்ளம், ஊத்துக்குழி, நாராயணபுரம், மேலமட்டயான், மலைப்பட்டி, புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

நீரை சிக்கனமாக பயன்படுத்தி 3 போக நெல் விவசாயம் செய்து வந்த விவசாயிகள், தற்போது ஒரு போக விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

காரணம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, நெல், சோளம், கம்பு, வெண்டைக்காய், உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீர்வரத்து காலங்களில் கண்மாயின் நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. மேலும் கண்மாயின் முழுகொள்ளளவு நீரை எட்ட முடியாமல் போய்விடுகிறது. இதனால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

மேலும் மழைகாலங்களில் வி.கோவில்பட்டி, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், கலுங்கு ஓடை, சட்டபிள்ளை ஓடை கால்வாய் போன்றவை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டது. இதனாலும் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபட்டு உள்ள நிலையில், கண்மாயில் உள்ள எட்டுமடைகளின் ஷெட்டர்கள் மற்றும் கட்டிட சுவர்கள் மிகவும் சேதமடைந்து உள்ளது. எனவே கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தை பெருக்கி 3 போக விவசாயம் நடைபெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்மாய் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தென்கரையை சேர்ந்த விவசாயி அருணாச்சலம் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கண்மாய் மூலம் 3 போக நெல் விவசாயம் செய்து வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் நீர்பிடிப்பு பகுதி துார்வாரப்படாமல் மேடாகி விட்டது. இதை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் கண்மாயின் நீர்பிடிப்பு இடங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் நீர்வரத்து காலங்களில் கண்மாயில் முழு கொள்ளவு நீர் தேக்க முடியாமல், ஒருபோக நெல் விவசாயத்திற்கே கடும் அவதியடைந்து வருகிறோம். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொது பணித்துறைக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Next Story