சுற்றுலா அனுப்புவதற்காக கூடுதல் தொகை கேட்டு மிரட்டல்: இழப்பீடு வழங்க தனியார் ஏஜென்சிக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
ஐரோப்பாவுக்கு சுற்றுலா அனுப்புவதற்காக கூடுதல் தொகை கேட்டு மிரட்டியதற்காக டாக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் ஏஜென்சிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை கோமதிபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் பிரேம்குமார். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நான், எனது மனைவி ஹேமாபோஸ், மகள் ஷிவானி ஆகியோருடன் ஐரோப்பாவுக்கு கோடை சுற்றுலா செல்ல 2012–ம் ஆண்டு முடிவு செய்தோம். இதற்காக விமான டிக்கெட், விசா போன்ற ஏற்பாடுகளை செய்து தருமாறு மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சியை அணுகி தெரிவித்தேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதற்காக ரூ.6 லட்சத்து 42 ஆயிரத்து 600–ஐ செலுத்தும்படி தெரிவித்தனர். 3 கட்டங்களாக அந்த தொகையை செலுத்தியதுடன், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை அவர்களிடம் அளித்தேன். இந்த நிலையில் விசாவுக்கு விண்ணப்பித்தோம். ஆனால் எங்களுடைய விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. சிறிது இடைவெளி விட்டு மீண்டும் விண்ணப்பித்தோம். விசா கிடைத்தது.
25.5.2012 அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐரோப்பாவுக்கு நாங்கள் புறப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து நாங்கள் 24.5.2012 அன்று மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தோம்.
அப்போது எங்களை தொடர்பு கொண்ட தனியார் ஏஜென்சி மேலாளர், முதல்தடவை விசா கேட்ட விண்ணப்பம் தள்ளுபடியானபோது, உங்களுக்காக விமான டிக்கெட் மற்றும் பல்வேறு ஏற்பாடுகள் செய்ததையும் ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. இதற்காக நீங்கள் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் செலுத்தினால் தான் சுற்றுலா செல்ல முடியும் என்று மிரட்டும் தொனியில் கேட்டார். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து, இவ்வளவு தாமதமாக கேட்கிறீர்களே என்றதற்கு, உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள், ஐரோப்பா சுற்றுலாவை ரத்து செய்து ஊர் திரும்பிவிட்டோம். எங்களுடைய பாஸ்போர்ட்டையும், பணத்தையும் தர மறுத்ததை எதிர்த்து தனியார் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்தேன். கோர்ட்டு உத்தரவின்பேரில் முதற்கட்டமாக ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 745–ஐ மட்டும் வழங்கினார்கள். மீத தொகையை திருப்பி கொடுக்கவும், தனியார் ஏஜென்சியின் நடவடிக்கையால் எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிறவிபெருமாள் ஆஜரானார்.
முடிவில், மனுதாரர்களுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடனும், மனுதாரர்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடாகவும் தனியார் ஏஜென்சி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.