பழனி அருகே முஸ்லிம்களுக்கு சொந்தமான சமாதியை சேதப்படுத்தியதால் பரபரப்பு


பழனி அருகே முஸ்லிம்களுக்கு சொந்தமான சமாதியை சேதப்படுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 3:30 AM IST (Updated: 12 Nov 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே முஸ்லிம்களுக்கு சொந்தமான சமாதியை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பழனி,

பழனி அருகே பாலசமுத்திரம் 7–வது வார்டு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு, அப்பகுதியில் உள்ள கோட்டை காளியம்மன் கோவில் வழியாக உடல்களை எடுத்து செல்கின்றனர். இது தொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

கோர்ட்டு உத்தரவுப்படி விழாக்காலத்தை தவிர, மற்ற நாட்களில் அந்த வழியாக மயானத்துக்கு உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் மயானப்பகுதிக்கு சென்று, சுமார் 200 ஆண்டுகள் பழமையான சமாதியை சேதப்படுத்தினர்.

நேற்று காலை அங்கு சென்ற முஸ்லிம்கள், சமாதி சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில், சுன்னத்துவல் ஜமாத் தலைவர் ஹக்கீம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமாதியை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சமாதி சேதப்படுத்திய தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோவில், முஸ்லிம் சமாதி அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமாதியை சேதப்படுத்திய நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று த.மு.மு.க. முன்னாள் மாநில செயலாளர் பாருக் தெரிவித்துள்ளார்.


Next Story