காட்பாடி அருகே கணவன்-மனைவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள்


காட்பாடி அருகே கணவன்-மனைவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள்
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மற்றும் அவருடைய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

காட்பாடி,

காட்பாடியை அடுத்த லத்தேரி அருகே உள்ள விக்ரமாசிமேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி பொன்னியம்மாள் (65). இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் டெல்லியில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். மகன் குமார் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் முருகேசனும், அவருடைய மனைவி பொன்னியம்மாளும் தங்கள் நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகேசனும், பொன்னியம்மாளும் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அலெக்ஸ், பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் பழனி, தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

5 தனிப்படைகள் அமைப்பு

அப்போது பொன்னியம்மாள் அணிந்திருந்த நகை, பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. எனவே, நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ் தலைமையில் 5 தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.

தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story