போலீஸ்நிலையம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி


போலீஸ்நிலையம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 12 Nov 2017 5:30 AM IST (Updated: 12 Nov 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரை கண்டித்து தவளக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

பாகூர்,

தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப் (வயது 55). இவருக்கு பாத்திமா (54), பிம்சா பேகம் (42) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

பாத்திமா மூலம் வல்தாஷ் ஷெரீப் (32), இப்ராகிம் (26) ஆகிய 2 மகன்களும், பிம்சா பேகம் மூலம் காதர் ஷெரீப் என்ற மகனும் உள்ளனர்.

பாத்திமாவுடன் குடும்பம் நடத்தி வந்த முகமது ஷெரீப், கடந்த சில நாட்களாக 2–வது மனைவி பிம்சா பேகத்தின் வீட்டுக்கு சென்று அவருடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாத்திமா தனது மகன்களுடன் பிம்சா பேகத்தின் வீட்டுக்கு சென்று முகமது ஷெரீப்பை தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டனர்.

ஆனால் பிம்சா பேகம் அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதனால் இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் ரோட்டில் நின்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற தவளக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் தகராறில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையின்போது போலீசார் பாத்திமாவின் குடும்பத்தினரை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

அதுபற்றி அறிந்ததும் பாத்திமாவின் உறவினர்கள் நேற்றுக் காலை பாத்திமா, அவருடைய மகன்கள், மற்றும் குடும்பத்தினர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்த போலீசாரிடம் இழிவாக பேசியது குறித்து தட்டிக்கேட்டனர். அப்போது பாத்திமா, அவருடைய குடும்பத்தினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக நடுரோட்டுக்கு ஓடினார்கள்.

மேலும் மண்எண்ணை தலையில் ஊற்றிக்கொண்டு குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்தும், ரோட்டில் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அதன் காரணமாக புதுச்சேரி–கடலூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தார். இந்த சம்பவம் காரணமாக தவளக்குப்பத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.


Next Story