கோவளம் அருகே, நள்ளிரவில் திருமண மண்டப பராமரிப்பாளர் மகளை கற்பழிக்க முயற்சி
கோவளம் அருகே திருமண மண்டப பராமரிப்பாளரின் மகளை கற்பழிக்க நடந்த முயற்சியில் தாய், தந்தை, மகளுக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கோவளம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பராமரிப்பாளராக மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி 3 மகள்களுடன் கடந்த 18 ஆண்டுகளாக அந்த திருமண மண்டபத்திலேயே தங்கிருந்து பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கோவளம் பகுதியை சேர்ந்த சிலர் திருமண மண்டபம் அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களிடம், மண்டப பராமரிப்பாளர் இங்கு மது அருந்தக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் மது அருந்தியவர்களுக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள மதில் சுவரை ஏறிக்குதித்து திருமண மண்டபத்துக்குள் புகுந்தார். அவர், அங்கு படுத்திருந்த மண்டப பராமரிப்பாளரின் மகளின் வாயில் துணியை வைத்து அடைத்து கற்பழிக்க முயன்றார். இதனால் அவர் அலறினார்.
அதைக்கேட்டு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தாய், தந்தை உள்ளே ஓடிவந்தனர். அப்போது ஒரு வாலிபர் கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பிக்க முயன்றார். அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது மண்டப பராமரிப்பாளர், அவருடைய மனைவி, மகள் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் மூவரும் பலத்த காயம் அடைந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் 3 பேரும் அழுதுக் கொண்டே இருந்தனர்.
அப்போது, கோவளம் பகுதியில் நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் மண்டபத்தில் மூவரின் அழுகை சத்தம் கேட்டு வந்து பார்த்தனர். பலத்த காயத்துடன் இருந்த அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் வராத நிலையில் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த மூவரையும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் கோவளம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் (24) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.