மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை


மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 12 Nov 2017 3:35 AM IST (Updated: 12 Nov 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவொற்றியூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்குன்றம்,

சென்னை ஏழுகிணறு அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் அமுதா(வயது 41). இவருக்கும், மாதவரம் தபால்பெட்டி கண்ணபுரம் தெருவைச் சேர்ந்த தாமோதரன்(44) என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. தாமோதரன், மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

திருமணத்தின் போது அமுதாவின் பெற்றோர், வரதட்சணையாக நகை, பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தனிக்குடித்தனம் செல்ல வீடு கட்ட கூடுதல் பணம் கேட்டனர். அதையும் கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் அதன்பிறகும் தாமோதரனின் தாய் மற்றும் சகோதரி கூடுதல் வரதட்சணை கேட்டு அமுதாவை கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் அவர், கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதுபற்றி மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2009–ம் ஆண்டு மே மாதம் அமுதா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி அமுதாவின் கணவர் தாமோதரன், மாமியார் சுலோச்சனா(68), தாமோதரனின் சகோதரி நிர்மலா(47) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.

இது தொடர்பான வழக்கு திருவொற்றியூர் கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் அமுதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானதால் மாஜிஸ்திரேட்டு பிரேமா, அமுதாவின் கணவர் தாமோதரன், மாமியார் உள்பட 3 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story