தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் தவித்த 4 வயது சிறுமி மீட்பு
தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் தவித்த 4 வயது சிறுமியை மீட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் 4 வயது சிறுமி தவித்துக் கொண்டு இருப்பதாக அங்குள்ள வியாபாரிகள், தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி, கோஷியா இருவரும் அங்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகள் கூறும்போது, ‘‘அந்த சிறுமி மீனா என்பவரின் மகள் யாமினி. மீனா அடிக்கடி இதுபோல தனது மகள் யாமினியை பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்று விடுவார். சிலநாட்கள் கழித்து மீண்டும் வந்து அழைத்துச்செல்வார். அதுவரையிலும் அந்த சிறுமியை பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகள் உணவு கொடுத்து பாதுகாத்து வந்தோம். தற்போதும் வழக்கம் போல மீனா, தனது மகளை விட்டு சென்றதால் சிறுமியின் நலன் கருதி தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் மூலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தோம்’’ என்றனர்.