கண்துடைப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வருவது எப்போது?


கண்துடைப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வருவது எப்போது?
x
தினத்தந்தி 12 Nov 2017 5:35 AM GMT (Updated: 12 Nov 2017 5:35 AM GMT)

ஏதாவது ஒரு சம்பவம் நடந்து அதில் உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு அதிகாரிகள் ஓடோடி சென்று நடவடிக்கை எடுப்பதில் என்ன பிரயோஜனம்?

தமிழகத்தில் நடக்கும் துரதிருஷ்டவசமான பல நிகழ்வுகளுக்கும் இதுவே தலைவிதியாக உள்ளது.

தமிழகம் சந்திக்கும் மோசமான சம்பவங்களை தொடர்ந்து அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு மறைந்து போவது தொடர் கதையாகி வருகிறது.

நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்கள் அரங்கேறிய போது, இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று அனைத்து தரப்பு மக்களும் கருதியது உண்டு.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்த சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதைத்தொடர்ந்து தனியார் பள்ளி பேருந்துகள் அதிரடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த சம்பவத்துக்கு பின்பு, போதிய பராமரிப்பின்றி ஓடிக்கொண்டிருக்கும் பள்ளி பேருந்துகள் பற்றி பேசுவோர் யாரும் இல்லை என்பது தான் உண்மை.

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலை ஓரத்தில் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் பாய்ந்து 10 பேர் உயிரிழந்தனர். ஐயோ கடவுளே... இந்த பரிதாபத்தை எங்கே போய் சொல்வது என்று எல்லோரும் கதறினோம்.

உடனே அதிகாரிகள் சாலை ஓரங்களில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க திறந்தவெளி கிணற்றின் அருகே சுவர் எழுப்ப வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.

உடனடியாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த உத்தரவு பறந்து சென்றது. ஓரிரு வாரங்கள் மட்டும் ஆய்வு நடத்தி அந்தந்த மாவட்டங்களில் சாலை ஓரங்களில் இருந்த கிணறுகளில் சுவர்களை எழுப்ப அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்பின்பு இந்த உத்தரவு காற்றில் பறந்து போயிற்று.

இதன்விளைவு 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருச்சி துவரங்குறிச்சி அருகே சாலை ஓரம் இருந்த 30 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் பாய்ந்தது. இதில் அதிஷ்ர்டவசமாக 7 பேர் படுகாயத் துடன் தப்பினர்.

இன்றைக்கும் எத்தனையோ கிணறுகள் சாலை ஓரங்களில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளியில் உள்ளன என்பதை அதிகாரிகள் நன்கு அறிவர். இதுகுறித்து புகார் அளித்தாலும் அதிகாரிகளின் மவுனம், அடுத்த உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருங்கள் என்பது போன்றே இருக்கிறது.

இன்னொரு உயிரிழப்பு நடந்தால் மட்டுமே கண்டுகொள்வோம் என்ற அதிகாரிகளின் தாரக மந்திரத்தை எப்படி ஏற்க முடியும்.

2013-ம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் 7 வயது சிறுமி விழுந்தாள். சிறுமியின் நிலை குறித்த பதைபதைப்பு எல்லோர் மனதிலும் இருந்தது. ஆனாலும், சிறுமியை காப்பாற்ற நடந்த 16 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது.

மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை சாக்கு போன்று இறுக்கமான ஏதாவது ஒன்றின் மூலம் உடனடியாக மூட வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் அதிரடியாக அறிவித்தனர்.

இந்த நடவடிக்கையும் வெகு நாட்கள் தொடரவில்லை.

சமீபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்காக அரங்கேறிய 4 பேரின் தீக்குளிப்பு பலரது நெஞ்சத்தை பதைபதைக்க செய்தது.

அப்போதும் வழக்கம்போல் கந்துவட்டி புகார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் பல்லவி ஓங்கி ஒலித்தது.

ஆனால் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அதிகாரிகளின் அவ்வப்போதைய கண்துடைப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தால் மட்டுமே உயிரிழப்பு என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இல்லாதபட்சத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர் கதையே...

- கல்விளை கதிர். 

Next Story