நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்.ஆர். தனபாலன் பேட்டி


நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்.ஆர். தனபாலன் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2017 10:30 PM GMT (Updated: 12 Nov 2017 6:44 PM GMT)

நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மாற்றம் ஏற்படப்போவதில்லை என மதுரையில் என்.ஆர்.தனபாலன் கூறினார்.

மதுரை,

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல், கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதுசம்பந்தமாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது சசிகலா குடும்பத்தினர் மீது நடத்தப்படும் வருமான வரி சோதனைகளில் கைப்பற்றப்படும் ஆவணங்களை வைத்து வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாது தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது 213 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலுக்காக தான் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. தோல்வி பயத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள இந்த வரிகுறைப்பு நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றி உள்ளது. வரி குறைப்பில் சிறுகுறு தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை.

நடிகர்களுக்கு அரசியல் தெரியாது. மக்கள் படும்பாடு தெரியாது. நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் மக்களுடன் பேசலாம். ஆனால் பொதுமக்கள் பிரச்சினைக்காக இறங்கி வரமாட்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன்.. என்று சொல்கிறார். நிச்சயமாக வரமாட்டார். அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மாற்றம் ஏற்படப்போவதில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை கொண்டு வருவோம் என பிரதமர் மோடி கூறியது பெரிய நாடகம். தென்னை மரத்திலிருந்து நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story