வருமான வரித்துறை நடவடிக்கையில் அரசியல் உள் நோக்கம் இல்லை பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி


வருமான வரித்துறை நடவடிக்கையில் அரசியல் உள் நோக்கம் இல்லை பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2017 4:45 AM IST (Updated: 13 Nov 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

சசிகலா குடும்பத்தினர் ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே வருமான வரித்துறை நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி,

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்று திருச்சி சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சிறிது கஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது போல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பான ஜி.எஸ்.டி. எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை இப்போது வியாபாரிகள், சிறு தொழில் அதிபர்கள் புரிந்து கொண்டு உள்ளனர். கடந்த 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஓட்டல்கள் மற்றும் பல உணவு பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்திலும் தேவைப்பட்டால் வரி குறைப்பு செய்யப்படும்.

வருமான வரித்துறை அதிகாரம் படைத்த ஒரு தனி அமைப்பு. 2 நாட்களாக சசிகலா குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்தது வெளிக்கொணர வேண்டியவையா? அல்லது தேவை இல்லாத செய்திகளா? என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

யாரையும் குறி வைத்து இந்த சோதனை நடத்தப்படவில்லை. மற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதா தலைவர்களின் நிறுவனங்களில் கூட வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒட்டுமொத்தமாக கூறி விடமுடியாது. வருமான வரித்துறையின் நடவடிக்கைகள் அவர்கள் நிர்ணயித்துள்ள கால அளவின் படி நடக்கும். இதில் யாரும் தலையிட முடியாது.

அரசியலுக்காக இது செய்யப்படவில்லை. இதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது, தொடர்பும் கிடையாது. இதனால் தமிழகத்திற்கு தலை குனிவும் கிடையாது. இந்தியாவில் இதுபோல் எத்தனையோ சோதனைகள் நடத்தப்பட்டு வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்படவில்லையா? தவறு செய்யக்கூடிய நபர்கள் அடையாளப்படுத்தப்படும்போது, நடவடிக்கை எடுக்கப்படும்போது அதனை அந்த மாநிலத்துக்கோ, மொழிக்கோ, சாதிக்கோ உள்ளடக்கி பார்ப்பதில் நியாயம் இல்லை.

எதிர்க்கட்சியினர் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களில் சிலருக்கு அடுத்த பட்டியலில் நாம் இருப்போமோ? என்ற அச்சம் கூட ஏற்பட்டு இருக்கலாம் அந்த அச்சத்தின் காரணமாக கூட உள்ளார்ந்த மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இப்படி விமர்சித்து இருக்கலாம். ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது இந்தியாவின் எங்கோ ஒரு மூலையிலோ, அண்டை மாநிலத்திலோ அல்ல. தமிழகத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடும், தமிழக மக்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடும், 7½ கோடி தமிழர்களும் சுரண்டப்பட்டு இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழ்நாடு என சொல்பவர்கள் இந்த நடவடிக்கையை பாராட்டி இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதனை கூறவில்லை.

ராகுல் காந்திக்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியை 15 சதவீதமாக குறைப்போம் என கூறி இருக்கலாம். தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது மனிதாபிமான அடிப்படையிலானது. இதில் அரசியல் இல்லை, யாரும் பயப்படவேண்டாம் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினும் கூறி இருக்கிறார். ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதன் மூலம் ஒட்டுண்ணியாக இருந்து அரசியல் பிழைப்பு நடத்தலாம் என கருதும் காங்கிரஸ் மற்றும் திருமாவளவன் போன்றவர்களுக்கு இந்த சந்திப்பு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க மூன்றாக பிளந்ததற்கு காரணம் பாரதீய ஜனதா தான் என குற்றம் சாட்டி உள்ளார். அவர் ஏற்கனவே அ.தி.மு.க.வை உடைத்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என ஒரு கட்சியை தொடங்கியதற்கும் பாரதீய ஜனதா தான் காரணம் என கூறினாலும் கூறுவார்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.2,500 கோடிக்கு அடகு வைக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ‘கழகங்கள்’ தமிழகத்தையே அடகு வைத்து விட்டன. அதைப்பற்றி தமிழக மக்கள் கவலைப்படாமல் பஸ்களை அடகு வைத்தது பற்றி பேசுகிறார்கள். தமிழக அரசின் செயல்பாடுகளில் இன்னும் வேகம் தேவை.

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்று நடத்த ஒப்புதல் அளித்து கடிதம் எழுதி இருப்பதாக தமிழக முதல்-அமைச்சர் என்னை சந்தித்த போது கூறினார். அந்த கடிதத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்த திட்டம் உள்பட இன்னும் பல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தேவையான நிதி உதவியை செய்யும். திருச்சியில் அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் இலாகா அனுமதி வழங்காமல் இருப்பது பற்றி எனது கவனத்திற்கு இப்போது தான் வந்து உள்ளது. அதற்கான அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பு பணத்தை எத்தனை ஆண்டுகளில் ஒழிக்க முடியும் என கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது. புதிய இந்தியாவை பிரதமர் மோடி நிச்சயம் உருவாக்குவார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story