2009–ம் ஆண்டு நிலச்சரிவில் 43 பேர் பலி: இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு
கடந்த 2009–ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 43 பேர் உயிரிழந்தனர். நீலகிரியில் இந்த கோரதாண்டவம் நடந்து இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.
ஊட்டி,
சர்வதேச அளவில் சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, புயல் காரணமாக மழை அதிகமாக பெய்யும்போது, நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் வீடுகள் இடிந்ததில் பலர் உயிரிழந்தனர். கடந்த 1978–ம் ஆண்டு புயல், மழையால் ஊட்டி நகரில் நிலச்சரிவு மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் 98 பேர் இறந்தனர். 3 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமானது.
இந்த சம்பவத்தின் போது, அன்றைய முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஊட்டியில் 2 நாள் முகாமிட்டு இருந்ததுடன், மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கோடப்பமந்து கால்வாயை அகலப்படுத்தியும், மழைநீர் தேங்காமல் படகு இல்ல ஏரிக்கு சென்று வெளியேறும் வகையிலும் நடவடிக்கை எடுத்தார். கடந்த 1989–ம் ஆண்டு மஞ்சூர் அருகே கெத்தையில் நீரிடியால் 54 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 1993–ம் ஆண்டு பலத்த மழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காட்டேரி அருகே உள்ள தர்கா, அதில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் 2 அரசு பஸ்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. கடந்த 1994 மற்றும் 1995–ம் ஆண்டு நிலச்சரிவால் குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் பாதிப்பு ஏற்பட்டது. 1998–ம் ஆண்டு பலத்த மழையால் எல்லநள்ளி அருகே உள்ள அல்லஞ்சியில் நிலப்பிளவு ஏற்பட்டதில் 45 வீடுகள் சேதமடைந்தன.
அதன்பிறகு கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தான் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதாவது 2009–ம் ஆண்டு நவம்பர் மாதம் 7–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை பலத்த மழை விட்டு, விட்டு பெய்தது. இதில் 11 மற்றும் 12–ந் தேதியில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் 13–ந் தேதி அதிகாலை ஊட்டி லவ்டேல், ஊட்டி–குன்னூர் சாலையில் உள்ள மந்தாடா, கேத்தி, எல்லநள்ளி, அருவங்காடு உள்பட பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. மேட்டுப்பாளையம்–குன்னூர், ஊட்டி–குன்னூர், கோத்தகிரி–மேட்டுப்பாளையம், ஊட்டி–கோத்தகிரி சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி என்ற பகுதியில் ஒரு தனியார் ஓட்டலின் நீச்சல் குளம் அடித்து செல்லப்பட்டது. ஊட்டி–கோத்தகிரி சாலையில் மைனலை பகுதி அருகே நெடுஞ்சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டது. ஊட்டி–மஞ்சூர் சாலை இடிந்து நொறுங்கி உருக்குலைந்து. இந்த தொடர் மழை மற்றும் பேரிடரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நீலகிரியில் ஆடிய இந்த கோரதாண்டவத்தில் கேத்தியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர், குன்னூரில் ஒரே நாளில் 4 பேர் உள்பட மொத்தம் 43 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் நடந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால் இந்த சம்பவம் மக்கள் மனதில் இன்னும் நீங்கா வண்ணம் உள்ளது.
இதற்கு காரணம் அன்றைய காலக்கட்டத்தில் ஊரெங்கும் மழை பெய்து வெள்ளக்காடானது. ஆனால் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் இருந்து சம்வெளி பகுதிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. காய்கறிகள், பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வருவதற்கும் சிரமம் ஏற்பட்டது. அவைகள் அனைத்து கூடலூர் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் பொருட்களின் விலையும் அதிகமாக உயர்ந்து இருந்தது. இந்த காலக்கட்டத்தில் ஊட்டி மக்கள் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. அதன் பின்னர் மீண்டும் சகஜநிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகின.
கடந்த 2009–ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை கருத்தில் கொண்டு, ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள மந்தாடா, கேத்தி, எல்லநள்ளி, அருவங்காடு ஆகிய பகுதிகளில் சரிவான இடங்களில் வீடுகள் கட்டக்கூடாது, வனப்பகுதியை ஒட்டி எந்தவித கட்டிட பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம்–குன்னூர், ஊட்டி–குன்னூர், மேட்டுப்பாளையம்–கோத்தகிரி, கோத்தகிரி–ஊட்டி ஆகிய சாலைகளில் அதிக பாரம் ஏற்றி வாகனங்களை இயக்குவதால் நில அதிர்வு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மேற்கண்ட பகுதிகளில் பெய்தால் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு அதிகமாக பெய்யவில்லை. இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, முக்கிய சாலைகளில் மணல் மூட்டைகள், பொக்லைன் எந்திரங்கள், தற்காலிக நெடுஞ்சாலை பணியாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
மேலும் பேரிடர் காலத்தில் சிக்கியவர்களை மீட்பது, தகவல் கொடுப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கிராமந்தோறும் உள்ள இளைஞர்கள் முதல்நிலை உதவியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய மலைச்சரிவான பகுதிகளில் வீடுகள் கட்டி வசித்து வருபவர்கள், மழை அதிகமாக பெய்யும் போது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.