கல்வராயன்மலையில் காளாண்களை சமைத்து சாப்பிட்ட கணவன்–மனைவி உள்பட 7 பேருக்கு திடீர் வாந்தி–மயக்கம்
கல்வராயன்மலையில் காளாண்களை சமைத்து சாப்பிட்ட கணவன்–மனைவி உள்பட 7 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை கவியம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 40), விவசாயி. இவருக்கு பழனியம்மாள்(37) என்ற மனைவியும், சிங்காரவேலு(16) என்ற மகனும், நித்யா(7) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் செல்வம் விவசாய பணி மேற்கொள்வதற்காக அருகில் உள்ள தனது வயலுக்கு மனைவி, குழந்தைகளுடன் சென்றார். அப்போது அவரது விளை நிலத்தில் காளாண்கள் முளைத்திருந்தது. இதைபார்த்த செல்வம் அந்த காளாண்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு, விவசாய பணிகளை முடித்து விட்டு, அங்கிருந்து அன்று மாலையே வீடு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று காலை பழனியம்மாள் அந்த காளாண்களை சுத்தம் செய்து, சாம்பார் வைத்தார். இதையடுத்து செல்வம் குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீடுகளை சேர்ந்த உறவினர்கள் அலமேலு(16), சக்திவேல்(22), சிந்தாமணி(12) ஆகிய 7 பேரும் சாப்பாட்டில் சாம்பாரை ஊற்றி சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிதுநேரத்தில் செல்வம் உள்ளிட்ட 7 பேரும் திடீரென வாந்தி ஏற்பட்டு, அடுத்தடுத்து அவர்கள் மயங்கி விழுந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, மயங்கிய 7 பேரையும் மீடடு சிகிச்சைக்காக கரியாலூரில் உள்ள மாவடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் 7 பேரும் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், செல்வம் தனது நிலத்தில் முளைத்திருந்த விஷ காளாண்களை நல்ல காளாண்கள் என நினைத்து பிடுங்கி சமைத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர்கள் 7 பேரும் வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.