வருமானவரி சோதனையை முன்கூட்டியே நடத்தி இருக்க வேண்டும் சரத்குமார் பேட்டி


வருமானவரி சோதனையை முன்கூட்டியே நடத்தி இருக்க வேண்டும் சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2017 11:15 PM GMT (Updated: 12 Nov 2017 7:24 PM GMT)

வருமானவரி சோதனையை முன்கூட்டியே நடத்தி இருக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

வாணியம்பாடி,

வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்துவிட்டார்கள். இதைவிட இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை கொடுத்து இருக்கலாம். தற்போது மத்திய அரசை பற்றி குறை சொன்னால் படம் நன்றாக ஓடும். ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரெயில் விடுவதை விட அனைத்து கிராமப்புறங்களிலும் மின்வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக இல்லை. எம்.ஜி.ஆருக்கு பின் எனக்கு அரசியல் கற்று கொடுத்தவர் கருணாநிதி. அதற்காக தான் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன்.

விஸ்வரூபம் திரைப்படம் குறித்து பிரச்சினைகள் வந்தபோது கமலஹாசன் எதிர்த்து குரல் கொடுக்காமல் சிங்கம் குகையில் இல்லாதபோது குரல் கொடுப்பது ஏன்?.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடத்தி வரும் வருமானவரித் துறை சோதனையை மத்திய அரசு முன்கூட்டியே நடத்தி இருக்க வேண்டும்.

ஜெயலலிதா இருந்த போது பேசாத அமைச்சர்கள் தற்போது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் முரனாண கருத்துகளை தெரிவித்து வருவதால் மக்கள் ஏளனமாக பேசுகின்றனர். எனவே அமைச்சர்கள் பேசும் போது தங்கள் கருத்துகளை ஆராய்ந்து பேசவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story