குன்றத்தூரில் 4 வயது குழந்தை மர்மச்சாவு கணவர் மீது மனைவி போலீசில் புகார்


குன்றத்தூரில் 4 வயது குழந்தை மர்மச்சாவு கணவர் மீது மனைவி போலீசில் புகார்
x
தினத்தந்தி 13 Nov 2017 4:30 AM IST (Updated: 13 Nov 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் 4 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இது தொடர்பாக கணவர் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற சரவணன் (வயது 32). வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த ஜெயந்தி (30) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களது மகள் கோசிகா (4). கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெயந்தி தனது மகள் கோசிகாவை தன்னுடன் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகளை பார்க்க வேண்டும் என்றும் வாரத்தில் 2 நாட்கள் மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் கூறி சரவணன் வந்தார். ஜெயந்தியின் பெற்றோரும் குழந்தையால் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்து வாரம்தோறும் கோசிகாவை சரவணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயந்தி உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வேலூர் சென்றுவிட்டதால் பள்ளியில் இருந்து கோசிகாவை, சரவணன் தனது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். அதன் பின்னர் கோசிகா தாயிடம் செல்போனில் பேசினாள். இந்த நிலையில் நேற்று காலை சரவணன் மனைவி ஜெயந்திக்கு போன் செய்து கோசிகா மயக்கம் அடைந்து விழுந்து விட்டாள். அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம் என்றார்.

அங்கு சிகிச்சை பலனின்றி கோசிகா இறந்துவிட்டாள் என்று சரவணன் தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன ஜெயந்தி மற்றும் அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். மகளின் உடலை பார்த்து ஜெயந்தி கதறி அழுதார்.

பின்னர் ஜெயந்தி குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகளின் முகத்தில் காயம் இருந்தது. தனது மகளை கணவர் சரவணன், அவரது பெற்றோர் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண் ஆகியோர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தந்தை வீட்டுக்கு சென்ற 4 வயது மகள் மர்மமான முறையில் இறந்துபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story