ராமநதி அணை தூர்வாரப்படும்: திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா


ராமநதி அணை தூர்வாரப்படும்: திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா
x
தினத்தந்தி 12 Nov 2017 10:45 PM GMT (Updated: 12 Nov 2017 8:07 PM GMT)

ராமநதி அணை தூர்வாரப்படும். திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை அறிவித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஏழை- எளிய மக்களுக்கு அம்பை வாகைகுளம் பகுதியில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். கீழப்பாவூர் யூனியன் பெத்தநாடார்பட்டியில் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு, மாணவிகள் சென்று வர வசதியாக கீழப்பாவூரில் இருந்து ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு புதிய பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட ராமநதி, ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 2-ம் கட்ட பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழப்பாவூர் யூனியன் பெத்தநாடார்பட்டி கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். பாளையங்கோட்டை யூனியன் முத்தூர் பஞ்சாயத்து காமராஜ்நகர் பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும். திசையன்விளையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பன்னோக்கு சமுதாய நலக்கூடம் கட்டப்படும்.

4 ஆயிரத்து 943 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கடையம் யூனியன் ராமநதி அணை தூர்வாரப்படும். நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்படும். வீரகேரளம்புதூர் தாலுகா, அகரம் கிராமத்தில் சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

சுரண்டையில் அனுமன்நதி, சிற்றாற்றில் கலக்கும் இடத்திற்கு மேற்கே தடுப்பணை கட்டப்படும். சுரண்டையில் அனுமன் நதியில் அருந்தவபிராட்டி தடுப்பணைக்கு கீழ்புறம் தடுப்பணை கட்டப்படும். சங்கரன்கோவில் தாலுகா பனையூர் கிராமத்தில் நிட்சேபநதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அதிநவீன உபகரணங்கள், சி.ஆர்.எம். கருவி, தாய்சேய் நல பிரிவுக்கு நவீன கருவிகள் மற்றும் மாரடைப்பு நோய் சிகிச்சைக்கான நவீன மருத்துவ பிரிவு அமைக்கப்படும். நெல்லை கண்டியப்பேரி ஆஸ்பத்திரியில் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதலுதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, கோவில்பட்டி, செங்கோட்டை ஆஸ்பத்திரிகளில் புதிய சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் புதிதாக ஒரு மருந்து கிடங்கு அமைக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் 379 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களை பதிவு செய்திட கையடக்க கணினிகள் வழங்கப்படும். மேலநீலிதநல்லூர் மற்றும் ராதாபுரம் வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவை மையங்கள் அமைக்கப்படும். சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தென்காசி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 2 டயாலிசிஸ் கருவி, எண்டோஸ்கோப் கருவி உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும். புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணம் மற்றும் சிகிச்சை மையம், கட்டணம் இல்லா கருத்தரிப்பு மையங்கள் உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் உள்ளிட்ட கருவிகள் மற்றும் தடுப்பூசி சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ரெட்டியார்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும். கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு டயாலிசிஸ் கருவி வழங்கப்படும்.

மதுரை- கன்னியாகுமரி சாலையில் தாழையூத்து முதல் டக்கரம்மாள்புரம் வரை இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும். இடைகால்- சேர்ந்தமரம், சங்கரன்கோவில்- வாசுதேவநல்லூர் ஆகிய சாலைகள் அகலப்படுத்தப்படும்.

ராதாபுரம் - இடையன்குடி சாலை ஒரு வழிச்சாலையில் இருந்து இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்படும். நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்.

மதுரை- கன்னியாகுமரி சாலையில் பாளையங்கோட்டை- செய்துங்கநல்லூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும். நாங்குநேரி- வள்ளியூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும். பணகுடி- ஆரல்வாய்மொழி ரெயில்வே நிலையங்களுக்கு இடையே ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும்.

அம்பை, தென்காசி, சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். மதுரை- கன்னியாகுமரி நாற்கர சாலையில் நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்துக்கு பதிலாக புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படும். அம்பை தாலுகா கோவிந்தபேரி மனோ கல்லூரியில் முதல் மாடி கட்டிட பராமரிப்பு பணி மற்றும் சுற்றுச்சுவர் கட்டி தரப்படும். ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரி மற்றும் சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி ஆகியவற்றுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Tags :
Next Story