நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 3 லட்சம் சரிவு கொள்முதல் விலை ‘கிடுகிடு’ உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 3 லட்சம் சரிவு கொள்முதல் விலை ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 12 Nov 2017 10:30 PM GMT (Updated: 12 Nov 2017 9:15 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் தினசரி உற்பத்தி செய்யப்படும் முட்டை சராசரியாக 3 லட்சம் வரை குறைந்து இருப்பதால், அதன் கொள்முதல் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

ஆனால், கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சமீப காலமாக முட்டை உற்பத்தி சரிவடைந்த நிலையில் உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூலை மாதம் நாள்ஒன்றுக்கு சராசரியாக 2 கோடியே 88 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்டு மாதம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 கோடியே 87 லட்சம் முட்டைகளும், செப்டம்பர் மாதம் 2 கோடியே 84 லட்சம் முட்டைகளும் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

கடந்த மாதம் (அக்டோபர்) மேலும் 3 லட்சம் முட்டைகள் உற்பத்தி குறைந்ததால், 2 கோடியே 81 லட்சம் முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

முட்டை உற்பத்தி குறைந்து கொண்டே வருவதால் அதன் விலை அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை ‘கிடுகிடு’ உயர்வு

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுவே நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதலில் அதிகபட்ச விலையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி 441 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை கொள்முதல் விலை தொட்டது. மீண்டும் முட்டை விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் 459 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு நாமக்கல் மண்டலத்தில் தினசரி சராசரி முட்டை உற்பத்தி 3 கோடியே 36 லட்சமாக இருந்தது. அது 2014-ம் ஆண்டு 3 கோடியே 14 லட்சமாகவும், 2015-ம் ஆண்டு 3 கோடியே 5 லட்சம் ஆகவும் குறைந்து உள்ளது.

கடந்த ஆண்டு நாமக்கல் மண்டலத்தில் தினசரி சராசரியாக 2 கோடியே 84 லட்சம் முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இதுவரை சராசரியாக நாள்ஒன்றுக்கு 2 கோடியே 81 லட்சம் முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

ரூ.6-க்கு சில்லரையாக விற்பனை

முட்டை உற்பத்தி குறைவு அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தொடர் மழைக்கு முட்டை விற்பனை அதிகரிப்பு, காய்கறி விலை உயர்வு போன்றவையும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என்றால் மிகையாகாது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 459 காசுகளாக உயர்ந்து இருப்பதால், சென்னை போன்ற பெருநகரங்களில் முட்டையின் சில்லரை விற்பனை ரூ.6-ஐ தொட்டு உள்ளது. இதனால் ஏழை, எளியவர்களுக்கு முட்டை எட்டாக்கனியாக மாறும் அபாயம் இருப்பதாக நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த 2014-ம் ஆண்டு நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் சராசரி கொள்முதல் விலை 315 காசுகள் ஆகும். அது படிப்படியாக கடந்த 4 ஆண்டுகளில் 49 காசுகள் உயர்ந்து உள்ளது. 2015-ம் ஆண்டு முட்டையின் சராசரி விலை 317 காசுகள் ஆகும். இதற்கிடையே, கடந்த ஆண்டு முட்டையின் சராசரி கொள்முதல் விலை 380 காசுகளாக உயர்ந்தது. இந்த ஆண்டு இதுவரை முட்டையின் சராசரி விலை 364 காசுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story