அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவர்கள் சிறந்த கல்வியாளராக வேண்டும்; பொள்ளாச்சி ஜெயராமன்
அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவர்கள் சிறந்த கல்வியாளராக வேண்டும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அருணாதேவி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு 2016–17–ம் ஆண்டு பிளஸ்–2 படித்த மாணவ– மாணவிகள் 87 பேருக்கு தமிழக அரசின் விலையல்லா மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–
தமிழக அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகின்றன. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை எல்லாம் கொண்டு வந்த மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நம்மிடம் இல்லாவிட்டாலும் அனைவரின் மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ–மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களாக உருவாக வேண்டும். ஆசிரியர்களும் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும்.
இப்பள்ளியில் கலை அரங்கம் கட்ட பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் சேர்த்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் செல்விபத்மினி, முன்னாள் துணைத் தலைவர் ரத்தினகுமார், பொள்ளாச்சி தாசில்தார் செல்வபாண்டி, மாவட்ட கல்வி அதிகாரி நாசருதீன், மண்ணூர் ஊராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம், அ.தி.மு.க பிரமுகர்கள் காளியாபுரம் முருகேசன், எம்.சக்திவேல், கோபாலபுரம் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 69 மாணவ– மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். விழாவில் பொள்ளாச்சி எம்.பி மகேந்திரன், கோவை மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சக்திவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.