சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 224 வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு தகவல்


சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 224 வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2017 10:45 PM GMT (Updated: 13 Nov 2017 9:09 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இதுவரை 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட சைல்டு லைன் அமைப்பின் சார்பில் என் நண்பன் வார விழா தர்மபுரியில் நேற்று தொடங்கியது. இதையொட்டி தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைல்டு லைன் அமைப்பிற்கு வந்த அழைப்புகள் மற்றும் மீட்பு பணியின் விவரங்கள் அடங்கிய கையேட்டை போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் சைல்டு லைன் மைய இயக்குனர் ஏசுராஜா, இயக்குனர் சைன்தாமஸ் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய அளவில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக உருவாக்கப்பட்ட சைல்டு லைன் அமைப்பு கடந்த 1996-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. சைல்டு லைன் அமைப்புடன் குழந்தைகள் பாதுகாப்பு பணியில் காவல்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக தற்போது சிறுவர்களுக்கான சிறப்பு போலீஸ் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுவர்களின் குற்றச்செயலால் பாதிக்கப்படும் சிறுவர்கள் ஆகிய பிரிவினரை கண்காணித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மாவட்ட அளவிலான இந்த குழுவின் தலைவராக துணை போலீஸ் சூப்பிரண்டும், ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஒரு போலீஸ்காரர் இந்த குழுவில் இடம்பெறுவார். இந்த குழுவை சேர்ந்தவர்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டறிதல், குற்றச்செயல்களை கண்காணிப்பின் மூலம் முன்கூட்டியே தடுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு உடனுக்குடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

இதேபோல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் சாதாரண உடையில் சென்று விசாரணை நடத்துவார்கள். குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து மீட்பதற்காக தர்மபுரி மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவும் செயல்பட்டு வருகிறது.

வளரிளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்காக தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளில் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 163 வழக்குகள் கோர்ட்டுகளில் விசாரணை நிலையில் உள்ளன.

தமிழகத்தில் இளம்வயது திருமணங்கள் மிக அதிக அளவில் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் உள்ளது. இதுதொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 272 புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story