மாமூல் தர மறுத்த பட்டதாரி வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கும்பல் ஒருவர் கைது


மாமூல் தர மறுத்த பட்டதாரி வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கும்பல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2017 10:30 PM GMT (Updated: 13 Nov 2017 10:13 PM GMT)

புழல் அருகே மாமூல் தர மறுத்த பட்டதாரி வாலிபர் மீது கொதிக்கும் பாலை 4 பேர் ஊற்றினர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர் மருதுபாண்டி நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் புழல் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். புழல் பகுதியை சேர்ந்த கண்ணன், டிப்பு, சங்கர் உள்பட 4 பேர் அந்த கடைக்கு சென்று அடிக்கடி மாமூல் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், லட்சுமணனின் மகன் பி.காம் பட்டதாரியான விக்னேஷ் (25) டீக்கடையில் இருந்தபோது அவரிடம் சென்று 4 பேரும் மாமூல் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கடையில் கொதித்து கொண்டிருந்த பாலை எடுத்து விக்னேஷ் மீது ஊற்றினர்.

இதில் தீக்காயம் அடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

பால் ஊற்றியபோது டிப்புவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள கண்ணன் ஆந்திர மாநிலத்தில் சட்டப்படிப்பு படித்து வருகிறார். அவரையும், அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story