பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு


பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு
x
தினத்தந்தி 13 Nov 2017 10:30 PM GMT (Updated: 13 Nov 2017 10:30 PM GMT)

‘‘எந்தவொரு பிரச்சினையிலும், அரசியல் ஆதாயம் பெறுவதில் பா.ஜனதா கைதேர்ந்த கட்சி’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14–ந் தேதிகளில், இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 18–ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சூழலில், 200–க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி வீதத்தை 28–ல் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த முடிவை மத்திய அரசு எடுத்ததாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுபற்றி பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:–

ஜி.எஸ்.டி. விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்த இந்த அரசு, இப்போது ஏன் திடீரென அடிபணிந்தது? குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜனதா சந்திக்கும் கடுமையான எதிர்ப்புகளே இதுபோன்ற பொய்களுக்கான பதில். எந்தவொரு பிரச்சினையிலும் அரசியல் ஆதாயமும், விளம்பரமும் பெறுவதில் பா.ஜனதா கைதேர்ந்த கட்சி.

குஜராத்தின் கிராமப்புறங்களில் பா.ஜனதா தலைவர்கள் நுழைவதற்கும், பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுவது இல்லை. அவர்களது போஸ்டர்களும் கிழிக்கப்படுகின்றன. இனி பல்வேறு மாநில முதல்–மந்திரிகளும், மத்திய மந்திரிகளும் நாட்டு பிரச்சினையை ஓரம்கட்டி விட்டு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். அதிகப்படியான பணமும் செலவிடப்படும்.

ஜி.எஸ்.டி.யால் நாட்டின் பணவீக்கம் உயர்ந்தது மட்டுமின்றி, ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் முதுகெலும்பும் உடைந்துவிட்டது. குஜராத்தில், ஜி.எஸ்.டி.யை கண்டித்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறு, குறு வியாபாரிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதுபோன்ற தடியடியின் சுமையை தாங்க வேண்டும் என்ற அச்சமும், பிரதமர் மோடியின் பிரசாரம் வேலைக்கு ஆகாது என்ற பீதியும் பா.ஜனதாவுக்குள் நிலவுகிறது.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.


Next Story