வீடுகளை அகற்ற எதிர்ப்பு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
தி.மு.க. மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், நிர்வாகி அசார் அகமத் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:– குமணன்சாவடி பகுதியில் நாங்கள் காலம், காலமாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வந்த அதிகாரிகள், ‘‘நீங்கள் குடியிருக்கும் இந்த பகுதி, நீர்நிலைகளில் உள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக வீடுகளை காலிசெய்ய வேண்டும்’’ என்று கூறி நோட்டீஸ் வழங்கினார்கள்.
அவ்வாறு வீடுகளை காலி செய்யாவிட்டால் வருவாய்த்துறையினர் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் கூறினர். இதுபற்றி நாங்கள், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் எங்கள் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள், இது தொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.