தேவகோட்டை ரஸ்தாவில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி 2–வது நாளாக மக்கள் போராட்டம்
காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ரஸ்தா பகுதியில் குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்காக தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. குப்பை கிடங்கு அமைக்கும்போதே ரஸ்தா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாளடைவில் இங்கு குப்பைகள் எரிக்கப்படுவதனால் சுகாதாரமற்ற நிலை உருவாகி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுபோக கடந்த சில ஆண்டுகளாக தேவகோட்டை நகராட்சியில் சேரும் குப்பைகளும் இங்கேயே கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் மேலும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கலெக்டரிடம் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்று தேவகோட்டை ரஸ்தா பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் காரைக்குடி நகராட்சியில் அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கு அருகில் அமைக்க முடிவு செய்யப்பட்டன. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் குப்பை கிடங்கை அகற்றக்கோரியும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு பகுதியில் அமைக்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை சப்–கலெக்டர் ஆஷா அஜீத், மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று கூறி பொதுமக்கள் சாலையோரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு வரை நீடித்த போராட்டம், நேற்று 2–வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அப்பகுதியில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில், குப்பை கிடங்கை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் இந்த போராட்டம் தொடரும் என்றனர்.