அ.தி.மு.க.வின் ஒரு அணியை பலப்படுத்தவே ‘மெகா சோதனை’ திருநாவுக்கரசர் பேட்டி


அ.தி.மு.க.வின் ஒரு அணியை பலப்படுத்தவே ‘மெகா சோதனை’ திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 15 Nov 2017 5:30 AM IST (Updated: 15 Nov 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வின் ஒரு அணியை பலப்படுத்தவே ‘மெகா சோதனை’ நடத்தப்பட்டது. இது தேர்தல் கூட்டணிக்காக பா.ஜ.க. போடும் திட்டம் என திருநாவுக்கரசர் கூறினார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேருவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

நேருவின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மீனவர் அணி தலைவர் கஜநாதன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவராஜசேகரன், எஸ்.சி. பிரிவு தலைவர் கு.செல்வபெருந்தகை உள்பட பலரும் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

முன்னதாக கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். பின்னர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த நேரு சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் உள்பட நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவை பெருமை கொள்ள செய்த தலைவரான ஜவஹர்லால் நேருவை நாம் என்றென்றும் நினைவுகூர வேண்டும்.

கிண்டி கத்திப்பாராவில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு அங்கு உள்ள நேரு சிலை தெரியவில்லை. எனவே இந்த சிலையின் பீடம் உயர்த்த வேண்டும். இல்லையெனில் விழாக்களின்போது மாலை அணிவிப்பதற்கு வசதியாக படிக்கட்டுகள் போல வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசும், பெருநகர சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தவறு கிடையாது. ஆனால் இந்த சோதனையை அதிக இடங்களில், ஆயிரக்கணக்கான அதிகாரிகளை கொண்டு நடத்தியிருப்பது, அ.தி.மு.க.வில் ஒரு அணி மீது மட்டும் நடத்தப்பட்டிருப்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட நகைகள், சொத்துகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன? என்பதை மக்களுக்கு வெளிப்படையாக வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும். அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருந்தால், அதனை மக்களுக்கு அளிக்கட்டும். இதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது.

ஜெயலலிதா மறைந்தவுடன், இப்போது பிரிந்து கிடப்பவர்கள் ஒன்றாக இருந்த சமயத்தில் வருமான வரி சோதனை நடத்தியிருந்தால் தற்போது கிடைத்திருப்பதை விட பல மடங்கு கிடைத்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே இதுபோன்ற சோதனை நடத்தியிருந்தால், இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கும்.

இப்போது நடத்தப்பட்ட ‘மெகா சோதனை’ அ.தி.மு.க.வின் ஒரு அணியை பலப்படுத்துவதற்காகவும், மற்றொரு அணியை பலவீனப்படுத்துவதற்காகவுமே நடத்தப்பட்டிருக்கிறது. பலப்படுத்தப்பட்ட அணிக்கு இரட்டை இலை சின்னம் தந்து உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

அதற்காகவே இந்த சோதனை என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருக்கிறது. இதை தீர்க்கவேண்டியது வருமான வரித்துறை, மத்திய அரசின் கடமை ஆகும். அரசியல் நோக்கங்களுக்காக இதுபோல சோதனை நடத்தக்கூடாது.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Next Story