பழனியில் அதிகாரியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


பழனியில் அதிகாரியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:00 AM IST (Updated: 15 Nov 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் அதிகாரியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதையொட்டி நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பள்ளி வளாகத்தில் குவிந்தனர்.

ஆனால் மதியம் வரை டாக்டர்கள் பரிசோதனை செய்ய முகாமுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் தரக்குறைவாக பேசிய அலுவலரை கண்டித்து பழனி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ முகாம் நடந்தது. இந்த மறியல் காரணமாக பழனி- திண்டுக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story