ஏழைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுதியோடு இருக்கிறது நீதிபதி பேச்சு


ஏழைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுதியோடு இருக்கிறது நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2017 4:15 AM IST (Updated: 15 Nov 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகளின் உரிமைகளை பாதுகாப் பதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுதியோடு இருக்கிறது என பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சட்டப்பணிகள் தினத்தையொட்டி பொதுமக்கள், வழக்காடிகள் உள்ளிட்டோரிடையே சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் கோர்ட்டு வளாகத்தில் “சட்ட விழிப்புணர்வு உதவிக்குழு மையத்தை” பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்து பேசுகையில், ஒவ்வொருவரும் சட்ட அறிவு மற்றும் சட்ட உதவிகளை எளிதில் பெறும் நோக்கில் தான் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது சட்ட உரிமைகள் குறித்தும், கடமைகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் அதன் கண் முன்பு ஒரே நிலையான நடுநிலை மட்டும்தான் புலப் படும். ஏழைகளின் உரிமைகளை பாதுகாப் பதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுதியோடு இருக்கிறது.

இதனால் வக்கீல் வைத்து வாதாட முடியாதவர்களுக்கு கூட வக்கீலை நியமித்து கொடுப்பது, சமரச தீர்வு மூலம் இழுபறி வழக்குகளை எளிதில் முடித்து வைப்பது, பெண்கள்-குழந்தைகளுக்கான உரிமைகளை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செவ்வனே செய்கிறது.

எனினும் மற்றவர்களின் ஏதோ ஒரு வகையான சலுகை உள்ளிட்டவற்றை தடைசெய்யும் விதமாக சட்டஉதவி மையத்தில் கோரிக்கையை முன்வைப்பது ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. பிறருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் சட்ட உதவிகள் கேட்டு இங்கு அணுக வேண்டாம் என்று கூறினார்.

பெரம்பலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து சட்ட உதவிகள் பெறுவதற்கான தகுதிகள், வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி ஜெயந்தி , வக்கீல் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி மற்றும் மணிவண்ணன், கணேசன், சித்ரா உள்ளிட்ட வழக்கறிஞர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைசாமி, நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சட்ட பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story