குப்பை கிடங்கை அகற்றக்கோரி 3–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்


குப்பை கிடங்கை அகற்றக்கோரி 3–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ரஸ்தா பகுதியில் குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று 3–வது நாளாக போராட்டம் நடத்தினர். அப்போது சாலையோரத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்காக தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. குப்பை கிடங்கு அமைக்கும்போதே ரஸ்தா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாளடைவில் இங்கு குப்பைகள் எரிக்கப்படுவதனால் சுகாதாரமற்ற நிலை உருவாகி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுபோக கடந்த சில ஆண்டுகளாக தேவகோட்டை நகராட்சியில் சேரும் குப்பைகளும் இங்கேயே கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் மேலும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதற்கிடையில் காரைக்குடி நகராட்சியில் அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கு அருகில் அமைக்க முடிவு செய்யப்பட்டன. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் குப்பை கிடங்கை அகற்றக்கோரியும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு பகுதியில் அமைக்க வலியுறுத்தியும் கடந்த 13–ந்தேதி தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று கூறி தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 3–வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரத்தில் சமையல் செய்து அவர்கள் சாப்பிட்டனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் மீண்டும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குப்பை கிடங்கை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினர்.


Next Story