ஜனவரி 1–ந் தேதி தமிழகம் முழுவதும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்; வெள்ளையன் பேட்டி
ஜனவரி 1–ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
பட்டிவீரன்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் வணிகர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்தும், ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்தும், வணிகர்களை பாதிக்கும் முன்பேர வர்த்தகம் மற்றும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் ஜனவரி 1–ந் தேதி அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும்.
ஜனவரி 30–ந் தேதி காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டு 70 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘காந்தி 70’ என்ற தலைப்பில் மாநாடு சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளது.
25 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. இதன் நோக்கம் இந்த இணையதளம் மூலமாக கிராமப்புறங்களில் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு வந்து உள்நாட்டு வணிகத்தை ஒழிப்பதற்காக போடப்பட்ட திட்டமாகும். ஒரே நாடு, ஒரே வரி என்பது பயன்தராது.
ஒரே இடத்தில் இருந்து இயங்கும் அன்னிய கம்பெனிகளுக்குத்தான் சாதகமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. ஆனால் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை இல்லை. மத்திய அரசு பொதுமக்கள், வியாபாரிகளின் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவே ஜி.எஸ்.டி. வரியை கூட்டி தற்போது குறைத்துள்ளது.
அன்னிய பொருட்களை புறக்கணித்து நம்நாட்டு வணிகத்தை பெருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காந்தியடிகள் சுதேசி இயக்கத்தை கொண்டு வந்தார். தற்போது இதே போல் ஒரு போராட்டத்தை நாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.