தமிழக அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும்


தமிழக அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் கவர்னருக்கு அவர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்ட வேண்டும் என தமிழ்தேசிய பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தஞ்சாவூர்,

தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அருணபாரதி, பழ.ராஜேந்திரன், மாரிமுத்து, வைகறை, குழ.பால்ராசு, விடுதலைச்சுடர், முருகன், ராசு, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணியரசன் பேட்டி

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தமிழ்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையார் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் வெளிமாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். மற்ற மாநிலங்களில் இருப்பதை போல மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் தனிச்சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். எனவே தமிழக அரசு உடனடியாக பாலிடெக்னிக் கல்லூரி பணி தேர்வு பட்டியலில் இருந்து வெளிமாநிலத்தவரை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கிய பின்னர் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும். இல்லையென்றால் வருகிற 23-ந்தேதி சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்தும் அறப்போராட்டத்தை நடத்த உள்ளோம்.

வருமானவரி சோதனை

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவின் மீது நடைபெறும் வருமானவரி சோதனையை தமிழ்தேசிய பேரியக்கம் வரவேற்கிறது. இதே போல் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசியல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது ஆதாரங்கள் கிடைத்தால் அவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். அந்த சொத்துக்களை இழந்தவர்கள் நீதிமன்றத்தை நாடி பெற்றுக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் சொத்துக்களை பறிமுதல் செய்வது அநீதியாகது.

தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் தற்போது புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படுவதை வன்மையாக கண்டிப்பது. இந்த அதிகார ஆக்கிரமிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும். அதே போல் பிரதமர் மோடியும் தடுக்க வேண்டும். கவர்னர் தனது அதிகார அடாவடித்தனங்களை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் அவர் செல்லுமிடத்தில் தமிழர்கள் கருப்புக்கொடி காட்டி திரும்பிப்போ என்று முழங்க வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட சாந்தப்பிள்ளைகேட் ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாத நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலம் கட்டிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் வெறும் வழக்குப்பதிவோடு நிற்காமல் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல்படையிரை கைது செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story