2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் திருட்டு


2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 Nov 2017 3:45 AM IST (Updated: 16 Nov 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை அருகே 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள மகாராஜபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பாலையூரை சேர்ந்த ஆதித்தியன்(வயது48) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், மேற்பார்வையாளர் ஆதித்தியனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் டாஸ்மாக் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே புகுந்து மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ராக்தி கொண்டு வரப்பட்டது. அது திருட்டு நடைபெற்ற கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை. இதுகுறித்து ஆதித்தியன் கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பைங்காநாடு

இதேபோல பைங்கா நாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,000 ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ரவி கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story