அரசு தொடக்கப்பள்ளி பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது பயன்பாட்டில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு


அரசு தொடக்கப்பள்ளி பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது பயன்பாட்டில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
x
தினத்தந்தி 16 Nov 2017 4:00 AM IST (Updated: 16 Nov 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே அரசு தொடக்கப்பள்ளி பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பெரிய கண்ணமங்கலத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளிக்கு ஓட்டு கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு பழைய கட்டிடத்தின் அருகே புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் பழைய கட்டிடம் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது. திருமருகல் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பழைய பள்ளி கட்டிடம் மேலும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அசம்பாவிதம் தவிர்ப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தமிழ்செல்வன், செபஸ்தியம்மாள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இடிந்து விழுந்த அரசு பள்ளி பழைய கட்டிடம் பயன்பாட்டில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story