நாட்டு வெடிகுண்டு தயாரித்த வழக்கில் ரவுடியின் மனைவி கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்த வழக்கில் காயமடைந்த ரவுடி கார்த்தியின் மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வானூர்,
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளத்தை சேர்ந்தவர் கார்த்தி என்கிற எலி கார்த்தி (வயது 27). பிரபல ரவுடி. இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக்கு எதிரிகளால் பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து அவர் பொம்மையார்பாளையம் பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்புக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடியேறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் பின்பக்கம் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதில் கார்த்தியின் இரண்டு கை விரல்களும் சிதைந்த தொங்கியது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கார்த்தியை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் ரகசியமாக வெடிகுண்டு தயாரிக்க கார்த்திக்கு அவரது மனைவி அருணா உடந்தையாக இருந்து தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆரோவில் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர்.பின்னர் வானூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு நம்பிராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய பெண்கள் சிறையில் அருணாவை போலீசார் அடைத்தனர். அவரது 3 மாத குழந்தையும் சிறையில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார்த்தி, யாரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டை ரகசியமாக தயாரித்தார்? இதில் யார்? யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மயக்க நிலையிலேயே கார்த்தி இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அவர் மயக்கம் தெளிந்த பின்னரே விசாரணை நடத்த முடியும். அவர் அளிக்கும் வாக்குமூலத்தின்பேரில் யாருக்காக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும். இந்த நிலையில் கார்த்தியின் கூட்டாளிகள் 2 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.