சிறந்த வங்கிக்கான விருது தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
பொன்னேரியில் சிறந்த வங்கிக்கான விருது தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
பொன்னேரி,
பொன்னேரியில் 1939–ம் ஆண்டு கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கியில் 14 ஆயிரத்து 241 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இந்த வங்கியின் மூலம் தமிழக அரசின் பொது சேவை மையம் தொடங்கி ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 250 வருவாய் ஈட்டி லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பேரவை கூட்டம் மாநில இயக்குனர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. வங்கி செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிக்கு மாநிலத்திலேயே சிறந்த வங்கிக்கான விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சின்னகாவனம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் வங்கியில் நீண்டகால கடன்கள் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும் லாபத்தில் சமுதாய வளர்ச்சி பணிக்காக 5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்து கிராமங்களின் வளர்ச்சிக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை பேரவையில் ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் லோகநாதன், வேல்முருகன், ரவீந்திரன், ஜனார்த்தனம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கியின் மேற்பார்வையாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.