உலகப் பேரருவி தினம்


உலகப் பேரருவி தினம்
x
தினத்தந்தி 17 Nov 2017 7:13 AM GMT (Updated: 17 Nov 2017 7:13 AM GMT)

உலகின் இரண்டாவது மிகப்பெரிய அருவி விக்டோரியா அருவி. பேரருவிகளின் ராணியான இது, இன்றைய நாளில்தான் (நவம்பர் 17) கண்டுபிடிக்கப்பட்டது.

விக்டோரியா அருவியைப் பற்றிய சுவையான தகவல்களை இந்த வாரம் அறிந்து கொள்வோம்...

  ஆப்பிரிக்கா கண்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது விக்டோரியா அருவி. உலகின் மிகப் பெரிய அருவியான இது, 1 மைல் (ஆயிரத்து 609 மீட்டர்) நீளம் கொண்டது. 360 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.

  விக்டோரியா அருவி உலகப் பேரருவி வரிசையில் இரண்டாம் இடம் பெறக் கூடியது. நயாகரா அருவியைவிட 3 மடங்கு உயரமானது விக்டோரியா அருவி. ஹார்ஷூ அருவியைவிட 2 மடங்கு அகலமானது. அர்ஜென்டினா, பிரேசில் எல்லையில் உள்ள இகுவாஷூ அருவி விக்டோரியா அருவியைவிட அகலமானது. இது 275 சிற்றருவிகளின் இணைப்பாக கொட்டும் பேரருவியாகும். இதுவே உலகின் மிக அகலமான அருவியாகும். 

  ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டேவிட் லிவிங்ஸ்டன், மகாலேலோ பழங்குடியினத்தவரின் துணையுடன், தனிப்படகில் லுயான்டாவில் இருந்து சிசேக் என்ற இடத்திற்கு ஆற்றில் பயணம் செய்தார். அப்போது 1855–ம் ஆண்டு நவம்பர் 17–ந் தேதி இந்த பேரருவியைக் கண்டார். அதுவரை அப்படியொரு அதிசய அருவி இருப்பது உலகிற்குத் தெரியாது. மழைக்காட்டிற்குள் வசித்த சில பழங்குடியினர் மட்டுமே அறிந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் சமூகத் தொடர்பு இல்லாததால் இந்த அருவி பற்றி வெளியே தெரியாமல் இருந்தது. லிவிங்ஸ்டன், இந்த அருவிக்கு இங்கிலாந்து ராணியின் நினைவாக, விக்டோரியா அருவி என்று பெயர் சூட்டினார்.

  அருவியைக் கண்டறிந்ததும் லிவிங்ஸ்டன் புகழ் உலகெங்கும் வேகமாகப் பரவியது. இந்த நதி வழியே வர்த்தகம் பெருகத் தொடங்கியது. ஜாம்பியாவின் ஒரு நகரம், ‘லிவிங்ஸ்டன் சிட்டி’ என்ற பெயரிலேயே வர்த்தக நகரமாக மாறியது.

  அருவியைக் கண்டுபிடித்த லிவிங்ஸ்டனுக்கு அருவியின் அருகே ஓரிடத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. அந்த ஆற்றில் உள்ள தீவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

  பேரிரைச்சலுடன் தண்ணீர் கொட்டும் இந்த அருவியை அருகில் நின்று பார்த்தால் வெறும் புகைமூட்டமாகத்தான் தெரியும். எனவே இதற்கு ‘இடிமுழக்க புகை அருவி’ என்ற பெயரும் உண்டு. ஜாம்பியா, ஜிம்பாப்வே நாடுகளின் வனத்துறை விக்டோரியா அருவியின் பாதுகாப்பு பணியை கவனிக்கின்றன. 

  மழைக்காலத்தில் வினாடிக்கு 11 லட்சம் லிட்டர் தண்ணீர் அருவியில் இருந்து கொட்டும். அப்போது அருவியில் இருந்து 1000 அடி தூரத்தில் நின்றால்கூட மழைப்பொழிவதுபோல தண்ணீரை தெளிக்கும். இப்படி அதிவேகத்தில் கொட்டும் தண்ணீரால் உருவாகும் பனிப்புகை மூட்டத்தை 50 கிலோமீட்டர் அப்பால் இருந்தும் பார்க்க முடியும். 

  இந்த அருவியைக் காண ஆயிரக்கணக்கானவர்கள் மலையேற்றம் செய்கிறார்கள். சிலர் ஹெலிகாப்டர் பயணமாகச் சென்று பார்வையிடுகிறார்கள். நீங்கள் ‘கூகுள் எர்த்’ இணைய பக்கத்தில், இருந்த இடத்திலிருந்தே இந்த அருவியை முப்   பரிமாண வடிவில் கண்டு ரசிக்க முடியும். 

  அருவியின் விளிம்புப் பகுதி, சிறிய அணைக்கட்டுபோல இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இது சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழவும், விளிம்புவரை சென்று அருவியின் அழகை ரசிக்கவும் வாய்ப்பாக அமைகிறது. ஆனாலும் இந்தப் பகுதி ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. எனவே இதற்கு ‘நரக குளங்கள்’ (டெவில்ஸ் பூல்) என்ற பெயருண்டு. ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதங்கள் இந்த அருவியில் வெள்ளப் பெருக்கு குறைவாக இருக்கும். அப்போது அருவியின் குறுக்கே பயணம் செய்ய முடியும். நீந்தி மகிழலாம். 

  நவம்பர் முதல் ஏப்ரல் வரை இங்கே மழைக்காலம். அதிகப்படியான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அருவியைப் பார்ப்பதே அரிதாகும். அப்போது இந்த பாறைக் குட்டைகளும், அருவிக்கரையும் ஆபத்தானவையாக அறிவிக்கப்படுகின்றன. ஜூன்–ஜூலை மாதங்கள் விக்டோரியா அருவியைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசந்த காலமாக இருக்கிறது. 

  விக்டோரியா அருவியை அங்குள்ள மக்கள் ‘மோசி ஆ துன்யா’ என்கிறார்கள். இதற்கு ‘இடி முழக்க புகையருவி’ என்று பொருளாகும். இது ஒரு பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இடமாகும்.

  1964–ல் இங்கிலாந்திடம் இருந்து ஜாம்பியா சுதந்திரம் பெற்றது. அப்போது அவர்கள் பல்வேறு நகரங்கள், தெருக்களின் பெயர்களை மாற்றி அமைத்தார்கள். ஆனால் விக்டோரியா அருவியின் பெயரையும், அருவியை கண்டறிந்த லிவிங்ஸ்டன் பெயரில் அமைந்த நகரத்தையும் அவர்கள் பெயர் மாற்றம் செய்யவில்லை. 

  பூமிக்கு அடியில் ஏற்பட்ட மிகப்பெரிய பாறை வெடிப்பால் விக்டோரியா அருவி உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 108 மீட்டர் ஆழத்தில் இந்த வெடிப்பு உருவானதற்கான சான்றுகள் அறியப்பட்டுள்ளது. அதிகம் வெள்ளம் பாய்ந்ததால் சில இடங்களில் வெடிப்புகள் மறைந்துள்ளன. 

இரவு வானவில்...

  வானவில்கள் பகலில்தான் தெரியும். ஆனால் விக்டோரியா அருவியில் கொட்டும் அதிகப்படியான தண்ணீரும், அங்கு நிலவும், இரவு வெளிச்சமும் இரவிலும் வானவில் காட்சியைத் தோன்றச் செய்கின்றன. அரிதாகத்தான் இந்தக் காட்சியை காண முடியும். இப்படி இரவில் தோன்றும் வானவில், ‘நிலவுவில்’ (‘மூன்போ’) என்று அழைக்கப்படுகிறது. 

  55 கோடி லிட்டர் தண்ணீர் ஒவ்வொரு நிமிடமும் விக்டோரியா அருவியில் இருந்து கொட்டுகிறது. இது கீழ் ஜாம்பசி நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. விக்டோரியா அருவியை பாதுகாப்பதற்காக 1983–ல் ஜாம்பெஸி தேசியப் பூங்கா அமைப்பும், விக்டோரியா அருவி தேசியப் பூங்கா (2013) அமைப்பும் உருவாக்கப்பட்டது. 

  விக்டோரியா அருவியில் சுற்றுலா பயணிகள் உயரத்தில் இருந்து குதிக்கவும், குறுக்கே நடக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களின் இடுப்பு, கால் மூட்டுகளில் கயிறு கட்டி விடுகிறார்கள். தலைகீழே குதித்து தொங்கியபடி அருவியின் அழகையும், வினோத அனுபவத்தையும் பெறலாம்.

  ஏராளமான வன உயிரினங்கள் இந்த அருவி பரப்பின் அருகே வசிக்கின்றன. யானைகள், சிறுத்தை, சிங்கம் போன்றவை அருவியின் அருகே உணவு தேடவும், நீர் அருந்தவும் வந்து செல்லும். இருந்தாலும் அவை அருவியின் இரைச்சலை விரும்பாததாலும், அவற்றுக்கு அருவியின் திசை பழகியிருப்பதாலும் பெரும்பாலும் அருவிக்கு வருவதை விரும்புவதில்லை. அரிதாகவே வந்து செல்கின்றன. காட்டுமாடுகள் மற்றும் நீர்யானைகள் அருவிக்கரை புற்களை மேய்வதற்காக அடிக்கடி வந்து செல்லும்.

  விக்டோரியா அருவியை மற்ற பெரிய அருவிகளுடன் ஒப்பிட்டு தெரிந்து கொள்வோம். விக்டோரியா அருவியின் உயரம் 108 மீட்டர், நயகாரா அருவியின் உயரம் 51 மீட்டர், இகுவாஷூ அருவியின் உயரம் 64 முதல் 82 மீட்டர். விக்டோரியா அருவி 1708 மீட்டர் நீளம் கொண்டது. நயாகரா அருவி 1203 மீட்டர் நீளமும், இகுவாஷூ அருவி 2 ஆயிரத்து 700 மீட்டர் நீளமும் கொண்டது. 

  தண்ணீர் அதிகமாக கொட்டும் அருவிகளில் நயாகரா முதலிடம் பிடிக்கிறது. இங்கு வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி நீரும், இகுவாஷூ அருவியில் 61 ஆயிரத்து 600 கன அடி நீரும், விக்டோரியா அருவியில் 38 ஆயிரத்து 430 கனஅடி நீரும் விழுகிறது.

Next Story