நம்பியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


நம்பியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு  அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 Nov 2017 9:15 PM GMT (Updated: 17 Nov 2017 2:00 PM GMT)

வள்ளியூர் அருகே உள்ள நம்பியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று திறந்து வைத்தார்.

திசையன்விளை,

வள்ளியூர் அருகே உள்ள நம்பியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று திறந்து வைத்தார்.

நம்பியாறு அணை திறப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் வள்ளியூர் அருகே நம்பியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பிசான சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமி கூறியதாவது:–

40 குளங்கள்

நம்பியாறு அணை மூலம் கோட்டைக்கருங்குளம், உறுமன்குளம், ரமதாபுரம், கரைச்சுத்துபுதூர், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், முதுமொத்தான்மொழி, திசையன்விளை ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த 40 குளங்கள் தண்ணீர் பெறுகின்றன. அணை நேரடி பாசனத்தில் 375¼ ஏக்கரும், மறைமுக பாசனத்தில் கோட்டைக்கருங்குளம், துத்திகுளம், கன்னகங்குளம், புதுக்குறிச்சிகுளம், ஆய்முடிகுளம், கொல்வாய்குளம், பாலாத்திகுளம், பாப்பான்குளம், குட்டிநாகன்குளம், பெருங்கண்ணன்குளம், சித்தாலன்குளம், பெரியாலன்குளம், கைலாசப்பேரிகுளம், பொன்னாத்திகுளம், நம்பிக்குறிச்சிகுளம், பூதனேரிகுளம், தருவைக்குளம், செந்திலான்பண்ணைகுளம், பசுவிழிகுளம், பெட்டைக்குளம், நந்தன்குளம், எருமைக்குளம், அவக்காய்குளம், குமாரபுரம்குளம், வண்ணான்குளம், பிள்ளையார்குளம், அப்புவிளைக்குளம், கீழப்படுகைகுளம், ஸ்ரீகிருஷ்ணபேரிகுளம், தினகரன்குளம், இஸ்லாபுரம்குளம், ரம்மாதாபுரம் குளம், புளிமான்குளம், தத்துவனேரிகுளம், பீலிக்குளம், புலிக்குளம், பெருங்குளம், சிறுகுளம், உறுமன்குளம், விளிமான்குளம் ஆகிய 40 குளங்கள் வாயிலாக 1,369¼ ஏக்கரும் என மொத்தம் 1,744½ ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

வினாடிக்கு 30 கனஅடி திறப்பு

அணையில் இருந்து வருகிற 2018–ம் ஆண்டு மார்ச் மாதம் 31–ந்தேதி வரை அணை வலது மதகு மூலம் வினாடிக்கு 15 கனஅடி வீதமும், இடது மதகு மூலம் வினாடிக்கு 15 கனஅடி வீதமும் மொத்தம் வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும். அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து குறைந்தால், இருக்கும் நீர் பாசனத்துக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் வினியோக பணியில் பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.


Next Story