திருச்செந்தூர் அருகே 2 கார்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதல்; 4 பேர் படுகாயம்
திருச்செந்தூர் அருகே லாரி அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே லாரி அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாலை பணிக்காக..குரங்கணியில் சாலை அமைக்கும் பணிக்காக, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து பாறைப்பொடி, ஜல்லிகற்கள் கலவை லோடு ஏற்றிய லாரி நேற்று மதியம் புறப்பட்டு சென்றது. அந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பாலநத்தத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயகணேஷ் (வயது 33) ஓட்டிச் சென்றார்.
அப்போது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலை சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் (20), சிவகாசி பனையடிபட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் குமரேசன் (26), சவுந்தர் மகன் தாமரைசெல்வன் (24) உள்ளிட்ட 4 பேர் ஒரு காரில் நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். சரவணன் காரை ஓட்டிச் சென்றார்.
லாரி– கார்கள் மோதல்திருச்செந்தூர் அருகே ராணிமகராஜபுரம் விலக்கு அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானது. அத்துடன், அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காயல்பட்டினத்தை சேர்ந்த காசி என்பவரது காரிலும் மோதிய லாரி, சாலையோர மரத்தில் பாய்ந்து நின்றது. இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜெயகணேஷ் கால் முறிந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அதேநேரத்தில், காரில் இருந்த சரவணன், குமரேசன், தாமரைசெல்வன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கியாஸ் வெல்டிங் மூலம் லாரியின் பாகங்களை துண்டித்து, ஜெயகணேசை மீட்டு, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் காயங்களுடன் துடித்து கொண்டிருந்த 3 பேரும் மீட்கப்பட்டு, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, சொந்த ஊரில் சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்சில் புறப்பட்டு சென்றனர். லாரி மோதிய மற்றொரு காரில் அமர்ந்து இருந்த காசி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.