கட்டப்பட்ட 6 ஆண்டுகளிலேயே முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவில் திடீர் பள்ளம்


கட்டப்பட்ட 6 ஆண்டுகளிலேயே முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவில் திடீர் பள்ளம்
x
தினத்தந்தி 18 Nov 2017 2:30 AM IST (Updated: 17 Nov 2017 9:03 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்டப்பட்ட 6 ஆண்டுகளிலேயே முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்,

புதிதாக கட்டப்பட்ட 6 ஆண்டுகளிலேயே முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

உயர்மட்ட பாலங்கள்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை அடுத்த முறப்பநாட்டில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் குறுகலாக இருப்பதால், ஒரே நேரத்தில் இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் எதிர் எதிரே இந்த பாலத்தில் கடந்து செல்ல முடியாது. இதனால் அடிக்கடி இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

கடந்த 2004–ம் ஆண்டு நெல்லை– தூத்துக்குடி இடையே நாற்கர சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது முறப்பநாடு ஆற்றுப்பாலத்தின் அருகில் இரண்டு புதிய உயர்மட்ட பாலங்கள் சிறிது இடைவெளியில் அருகருகே அமைக்கும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு...

புதிய பாலங்களை அமைக்க டெண்டர் எடுத்த நிறுவனம், பணியை கிடப்பில் போட்டதால், மற்றொரு நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டு, கடந்த 2011–ம் ஆண்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன. இரு புதிய பாலங்களையும் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் வடபக்க பாலத்திலும், தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வாகனங்கள் தென்பக்க பாலத்திலும் செல்கின்றன.

நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் முறப்பநாடு ஆற்றுப்பாலம் வழியாக சென்று வருகின்றன.

பாலத்தின் நடுவில் பள்ளம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் முறப்பநாடு வடபக்க ஆற்றுப்பாலத்தில் நடுவில் திடீரென்று பள்ளம் உருவாகியது. அதன் நடுவில் சுமார் 3 அடி நீள அகலத்தில் தார் சாலை பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தன. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வாகனங்கள் செல்லும் வடபக்க பாலத்தின் இருபுறமும் இரும்பு தடுப்பு கம்பிகளை அமைத்து அடைத்தனர். பின்னர் அனைத்து வாகனங்களையும் தென்பக்க பாலத்தின் வழியாக திருப்பி விட்டனர். இதனால் தென்பக்க பாலத்தில் அனைத்து வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து சேதம் அடைந்த புதிய பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், சேதம் அடைந்த பாலத்தை விரைவில் சீரமைத்து, அதில் போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்யப்படும். புதிய பாலம் கட்டுமான பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

தரத்தை உறுதி செய்ய...

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அந்த பாலத்தை பக்கபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதன் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலம் 6 ஆண்டுகளிலேயே சேதம் அடைந்து விட்டது. வழக்கமாக புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும்போது, பல்வேறு அடுக்குகளாக கான்கிரீட் அமைப்பார்கள். பாலத்தின் மேற்புறமும் கான்கிரீட் சாலை அமைப்பார்கள்.

ஆனால் முறப்பநாடு புதிய பாலத்தின் மேற்புறம் சிமெண்டு சாலைக்கு பதிலாக தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தார் சாலை சேதமடைந்தவுடன், அந்த இடத்தில் கான்கிரீட்டுக்கு பதிலாக இரும்பு கம்பிகளே தெரிகின்றன. கான்கிரீட் கம்பிகளின் மீது சிமெண்டு கலவைக்கு பதிலாக தார் ஊற்றி சாலை அமைத்து உள்ளனர். எனவே இதுகுறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். பாலத்தை சீரமைத்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story