நெல்லை மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்
நெல்லை மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
மாலை அணிவித்துசபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜை சிறப்பு வாய்ந்தது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மாலை அணிவித்து, விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று வழிபாடு நடத்தி வருவது வழக்கம். அதை தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்து மாலையை கழற்றி விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.
நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். நெல்லையில் நேற்று அதிகாலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் வைத்து, துளசி மணி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினார்கள்.
நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில், தியாகராஜ நகர் அய்யப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினார்கள்.
குற்றாலம் அருவிக்கரைகுற்றாலம் மெயின் அருவி கரையில் உள்ள விநாயகர் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிவித்து விரதம் தொடங்கினார்கள். இதற்காக அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் தங்களது குருசாமியுடன் குற்றாலம் வந்தனர். குற்றாலம் அருவியில் தற்போது சுமாராக தண்ணீர் விழுகிறது.
அருவியில் குளித்து விட்டு மாலை அணிவித்து விரதம் தொடங்கினார்கள். நேற்று காலை 4 மணியில் இருந்தே அருவிக்கரையில் பக்தி கோஷம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதேபோல் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களிலும், செங்கோட்டையை அடுத்த கேரள மாநிலம் ஆரியங்காவு மற்றும் அச்சன்கோவிலில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினார்கள்.