திண்டுக்கல்லில் கூட்டுறவு வார விழா: அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.30,311 கோடி பயிர் கடன்
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.30 ஆயிரத்து 311 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மகாலில் கூட்டுறவு வார விழா நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். முன்னதாக மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.கே.டி.நடராஜன் அனைவரையும் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.பழனிவேலு திட்ட உரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்புரை வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:–
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், எங்களை குறைகூறும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர், ஆட்சிக்கு வந்தால் எதுவும் செய்யப்போவதில்லை. அவர்கள் பதவிக்காக மக்கள் நலம் பேசுபவர்கள்.
கடந்த 6½ ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரத்து 311 கோடி பயிர் கடன் வழங்கி இருக்கிறோம். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் 1,279 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. மேலும், காய்கறி சாகுபடி கடனாக ரூ.495 கோடி வழங்கி உள்ளோம்.
இதுபோக, வறட்சி நிவாரணம், தானே புயல் நிவாரணம், கடன் தள்ளுபடி, குறுவை தொகுப்பு, இடுபொருள் மானியம் என கடந்த 6½ ஆண்டுகளில் 90 லட்சத்து 32 ஆயிரத்து 330 விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 349 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 6½ லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 153 கோடி வழங்கி இருக்கிறோம். இன்னும் ரூ.11 கோடி மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டி உள்ளது.
ஆனால், தி.மு.க. 5 ஆண்டு கால ஆட்சியில் வெறும் ரூ.9 ஆயிரத்து 136 கோடி தான் பயிர் கடன் வழங்கியது. தற்போது, ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய காமெடி ஒன்றை சொல்கிறார். அதாவது, ‘அ.தி.மு.க. ஆட்சிக்கு எப்போது முடிவு காலம் வரும்’ என மக்கள் அவரிடம் கேட்பதாக சொல்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இரட்டை இலையும் கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவரைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 26 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு ரூ.148 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 1,279 கோடி ரூபாய் பயிர் கடனும், 62 கோடி ரூபாய் முதலீட்டு கடனும் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவை சென்ற தமிழக கவர்னரும் அரசை பாராட்டி உள்ளார். தமிழக அரசு ஜெயலலிதா பாதையில், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை பெற்று வருகிறது’ என்றார்.
இந்த விழாவில், சிறப்பாக செயல்பட்ட 22 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன. இதுபோக 597 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், முன்னாள் மேயர் மருதராஜ், கூட்டுறவு அச்சக தலைவர் ஜெயசீலன், அபிராமி கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பாரதிமுருகன், ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, கூட்டுறவு துணை பதிவாளர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.