ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் முடங்கியுள்ளது; நல்லக்கண்ணு
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் திருப்பூர் தொழில் முடங்கியுள்ளதாக திருப்பூரில் நடந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசினார்.
திருப்பூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நவம்பர் சோசலிச புரட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் வ.உ.சி.நகர் பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் உள்ளவர்களின் பிழைப்புக்கான இடமாக திருப்பூர் உள்ளது. லட்சக்கணக்கானோர் இங்கு வந்து வேலை செய்கின்றனர். தற்போது ஜி.எஸ்.டியினால் தொழில் வளம் கெட்டு, பிழைப்புக்காக வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று விட்டனர்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளாலும் திருப்பூர் தொழில் முடங்கி போய் உள்ளது. பதவியை தக்கவைத்து கொள்ளவே தமிழக தற்போதைய அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். இதனாலேயே மத்திய அரசுடன் இணக்கமாக சென்று கொண்டிருக்கின்றனர். நாட்டையே கொள்ளையடித்து விட்டார்கள். இந்த மோசமான ஆட்சியை அகற்றுவதற்காக போராடும் நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசியபோது கூறியதாவது:–
மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. பணக்காரர்களுக்கான நாடாக மாறிவிட்டது. அம்பானி, அதானி உள்ளிட்டவர்களை வளர்க்கும் பணியிலேயே தற்போதைய அரசு ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதிலேயே தான் அரசு முனைப்பாக உள்ளது. நாடே கடன் பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நமது இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளாலேயே திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பு நுரை பொங்கியது. மது உற்பத்தியை ரத்து செய்ய உத்தரவிடும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. உணவு பொருட்களுக்கு 5 சதவீதத்திற்கு மேல் வரி போடக்கூடாது என்பது விதிமுறை உள்ளது. ஆனால் அடித்தட்டு மக்கள் மீது அதிகவரி விதிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத வளர்ச்சிபணிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் அரசு விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகளை நாம் தூக்கி எறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.