நகைக்கடையில் துளைபோட்டு கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு


நகைக்கடையில் துளைபோட்டு கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 17 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-18T03:36:54+05:30)

புழலில், நகைக்கடையில் துளைபோட்டு திருடிய கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் நகைக்கடைக்காரரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் முகேஷ்குமார்(வயது 37). நேற்று முன்தினம் மதியம் முகேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சாப்பிட சென்று விட்டனர்.

மாலை 4 மணியளவில் மீண்டும் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது கடையின் கண்ணாடி அலமாரியில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகைக்கடையின் மேற்கூரையில் ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டு இருந்தது.

மாடியில் உள்ள கடையில் இருந்து துளைபோட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கடையில் இருந்த 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், நகைக்கடையின் மாடியில் உள்ள கடையை ராஜஸ்தான் மாநில வாலிபர்கள் 2 பேர், துணிக்கடை வைக்கப்போவதாக கூறி வாடகைக்கு எடுத்து இருந்தனர். தினமும் அவர்கள், கடையில் வேலை நடப்பதாக வந்து சென்றனர்.

அப்போது நகைக்கடை மூடும் நேரத்தை நோட்டமிட்ட அவர்கள், மாடியில் உள்ள கடையின் தரை தளத்தை துளையிட்டு அதன் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு தனிப்படை போலீசார், ராஜஸ்தான் விரைந்து உள்ளனர்.

மும்பையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதேபோல் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் இதேபோல் 2 வடமாநில வாலிபர்கள், நகைக்கடைக்கு மாடியில் காலியாக இருந்த ஒரு கடையை துணிக்கடை வைக்கப்போவதாக கூறி வாடகைக்கு கேட்டனர். ஆனால் அந்த கடையின் உரிமையாளர் அதற்கு மறுத்து விட்டார்.

எனவே அந்த வாலிபர்கள் தான், கிருஷ்ணகிரியில் தங்கள் கொள்ளை திட்டத்தை அரங்கேற்ற முடியாததால் புழலுக்கு வந்து கடையை வாடகைக்கு எடுத்து நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டனரா?, மும்பையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகங்கள் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு தனிப்படை போலீசார், கிருஷ்ணகிரிக்கு விரைந்தனர்.

அங்கு கடையை வாடகைக்கு கேட்ட மர்மநபர்கள் குறித்து கடையின் உரிமையாளர், அக்கம்பக்கம் உள்ள கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை ஆராய வீடியோ பதிவுகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மர்மநபர்கள் ரெயில், பஸ் மூலம் தப்பிச்சென்று இருக்கலாம் என்பதால் சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் அங்குள்ள வீடியோ காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

கட்டிடத்தின் உரிமையாளர் பாண்டுரங்கன், கடையை வாடகைக்கு கேட்டவர்களிடம் பெயர், முகவரி, புகைப்படம் என எதுவும் பெறாமல் வாடகைக்கு கொடுத்து உள்ளார். நகைக்கடை உரிமையாளர் முகேஷ்குமார் அளித்த தகவலின்பேரில் அவர்களுக்கு வாடகைக்கு கொடுத்ததாக கூறினார்.
இதனால் போலீசாருக்கு முதலில் முகேஷ்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார், கட்டிட உரிமையாளர் பாண்டுரங்கன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் முகேஷ்குமார் இருவரிடமும் துருவி, துருவி தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் பாண்டுரங்கன் கூறியதாவது:-
கடந்த 1-ந்தேதி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தமிழில் பேசிய நபர், உங்கள் கடையை வாடகைக்கு விடுவதாக கேள்விப்பட்டோம். அங்கு துணிக்கடை வைக்க வாடகைக்கு தரவேண்டும் என்றார். அதன்பிறகு வடமாநில வாலிபர்கள் 2 பேர் என்னை சந்தித்து வாடகை குறித்து பேசினர். அவர்கள் பேசிய மொழி, எனக்கு புரியாததால் நகைக்கடைக்காரர் முகேஷ்குமாரிடம் கூட்டிச்சென்றேன்.

அந்த வாலிபர்களிடம் முகேஷ்குமார் பேசி என்னிடம் கூறினார். கடைக்கு மாத வாடகை ரூ.3 ஆயிரம், முன்பணம் ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என்று கூறினேன். அதற்கு சம்மதம் தெரிவித்த அவர்கள், முன்பணம் ரூ.30 ஆயிரம் கொடுத்தனர்.

அவர்கள் வாடகைக்கு கேட்ட கடையில் இதற்கு முன்பு பெண்கள் அழகுநிலையம் இருந்தது. அதன் உரிமையாளர் கடையை காலி செய்து விட்டார். அவர் கொடுத்த முன்பணம் ரூ.30 ஆயிரத்தை திரும்பக்கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் எனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதாலும், முகேஷ்குமாரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்தான், அவர் 15 வருடங்களாக எனது கடையில் வாடகைக்கு இருப்பதாலும் அவர் மீதான நம்பிக்கையில் வந்தவர்களிடம் மேற்கொண்டு எந்த விவரமும் கேட்காமல் சம்மதித்து விட்டேன்.

அவர்கள் தினமும் கடையில் துணிக்கடை வைப்பதற்கான வேலையில் ஈடுபடுவது போல் ஆணி அடிப்பது, கடைக்கு பெயிண்ட் அடிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நகைக்கடை உரிமையாளர் முகேஷ்குமார், போலீசாரிடம் கூறும்போது, “பாண்டுரங்கன்தான் அவர்கள் 2 பேரையும் என்னிடம் அழைத்து வந்தார். அந்த கடையில் முதலில் அழகுநிலையம் இருந்தது. அது எனது கடைக்கு இடையூறாக இருந்தது. ஆனால் தற்போது வாடகைக்கு கேட்ட 2 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றதால் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், துணிக்கடை வருவதால் நமக்கு தொந்தரவு இருக்காது என்பதாலும் அவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கலாம் என்று பாண்டுரங்கனிடம் கூறினேன். மற்றபடி அவர்கள் யார்? என்பது எனக்கு தெரியாது” என்றார்.

முகேஷ்குமார், தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை செய்வதுடன், நகைகளை அடகு வைத்து பணம் தருவது மற்றும் மாதாந்திர நகை சீட்டும் நடத்தி வந்தார். தற்போது கடையில் கொள்ளை நடந்து இருக்கும் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நகை அடகு வைத்து இருப்பவர்கள், சீட்டு கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவே கடை முன் திரண்டனர். நேற்று காலையிலும் பூட்டிக்கிடக்கும் நகைக்கடையை பரிதவிப்புடன் பார்த்து சென்றனர்.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். எங்களுக்கு முக்கிய துப்பு கிடைத்து உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம்” என்றார்.

Next Story