சென்னை முகப்பேரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சென்னை முகப்பேரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2017 10:55 PM GMT (Updated: 17 Nov 2017 10:55 PM GMT)

சென்னை முகப்பேரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்பத்தூர்,

சென்னை முகப்பேர் மேற்கு காந்தி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சூரியகுமாரி(15). இவர், அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சூரியகுமாரி, படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்று இருந்த அவருடைய பெற்றோர், வீட்டுக்கு வந்த போது, தங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவி சூரியகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், மணிகண்டன் தனது குடும்பத்துடன் திருமங்கலம் பாடிக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அங்குள்ள அரசு பள்ளியில் சூரியகுமாரி படித்து வந்துள்ளார்.

அங்கிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மணிகண்டன் குடும்பத்துடன் முகப்பேர் பகுதிக்கு குடிவந்தார். இதையடுத்து சூரியகுமாரியை முகப்பேர் பகுதியில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.

ஆனால் புதிய பள்ளிக்கூடத்தில் படிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், தன்னை பழைய பள்ளிக்கூடத்திலேயே சேர்த்து படிக்க வைக்கும்படியும் பெற்றோரிடம் கூறி வந்தார்.

புதிய பள்ளிக்கூடம் பிடிக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி சூரியகுமாரி, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story